"மனுதாரர்களுக்கு தகவல் தர மறுக்கும் அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை'
By DIN | Published On : 25th June 2019 10:19 AM | Last Updated : 25th June 2019 10:19 AM | அ+அ அ- |

உரிய கால கெடுவிற்குள் மனுதாரர்களுக்கு தகவல் வழங்க மறுக்கும் பொது தகவல் அலுவலர்களுக்கு அபராதம் விதிப்பதோடு, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்யப்படும் என மாநில தகவல் ஆணையர் கோ.முருகன் எச்சரித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாநகராட்சி தொடர்பான சொத்து வரி, பாதாள சாக்கடை இணைப்பு,
பட்டா மாறுதல், துப்புரவுப் பணியாளர் ஒப்பந்தம் மற்றும் மாநகராட்சி பணிகள் குறித்த 14 இரண்டாம் மேல்முறையீட்டு மனுக்கள் மீது அவர் திங்கள்கிழமை விசாரணை நடத்தினார். அப்போது, திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் மற்றும் மேலப்பாளையம், திருநெல்வேலி, பாளையங்கோட்டை மண்டல உதவி ஆணையர்கள் உரிய காலத்துக்குள் மனுதாரர்களுக்கு தகவல் அளிக்க உத்தரவிட்டார்.
மேலும், தகவல் வழங்க மறுக்கும் பொது தகவல் அலுவலர்களுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005, பிரிவுகள் 20 (1)-ன்படி அபராதமும், 20 (2)-ன்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்யப்படும் என்றார்.