சுடச்சுட

  

  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர், வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் மனு அளிக்கும் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.
  ஆலங்குளத்தில் நடைபெற்ற போராட்டத்துக்கு சங்கச் செயலர் ராமசாமி தலைமை வகித்தார். வட்டச் செயலர் குணசீலன், பீடித் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் ராஜாங்கம், வட்ட நிர்வாகிகள் மகாவிஷ்ணு, பாலு, மாரியப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர். 
  100 நாள் வேலைத் திட்டத்தை 200 நாள்களாக மாற்ற வேண்டும்; விவசாயத் தொழிலாளர்களுக்கு கூலியாக அரசு அறிவித்துள்ள உயர்த்தப்பட்ட தொகையை வழங்க வேண்டும்; குடிநீர் இல்லாத கிராமங்களுக்கு உடனடியாக குடிநீர் வசதி செய்து கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. பின்னர் தொழிலாளர்கள் 175 பேர் தனித்தனியே வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்தனர்.
  அம்பாசமுத்திரம்: கடையம் ஊராட்சி ஒன்றியம்,  மந்தியூர், தெற்கு கடையம், கீழக்கடையம், வீராசமுத்திரம் உள்ளிட்ட ஊராட்சி மக்களுக்கு தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ்பணி ஒதுக்கக் கோரி விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலர் வெங்கடேஷ் தலைமையில், தொழிலாளர்கள் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
  இதில், விவசாய சங்க ஒன்றியச் செயலர் முத்துராஜன்,  ஒன்றிய துணைத் தலைவர் கிறிஸ்டோபர்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றியக் குழு உறுப்பினர் ஜெயராஜ், பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
  சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் அருகே மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற விவசாயிகள் முற்றுகைப் போராட்டத்துக்கு, விவசாய தொழிலாளர் சங்கத் தலைவர் ஆர்.மாரியம்மாள் தலைமை வகித்தார். மா.செல்லத்தாய், க.ராம்தாய், க.உடையம்மாள், எம்.மாரியம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
  ஊராட்சி முன்னாள் தலைவர் சு.வெள்ளைத்துரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வட்டாரச் செயலர் அசோக்ராஜ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாவட்டச் செயலர் பெ.பாலுசாமி கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார். துணைத் தலைவர் செல்லத்தாய் நன்றி கூறினார். பின்னர் கோரிக்கைகள் அடங்கிய மனுவை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயராமனிடம் அளித்தனர்.  
  சிவகிரி: வாசுதேவநல்லூரில் நடைபெற்ற போராட்டத்துக்கு, விவசாயத் தொழிலாளர்கள் சங்க ஒன்றியச் செயலர் ப. சுப்பையா தலைமை வகித்தார். நூறு நாள் வேலை அட்டை வைத்துள்ள அனைவருக்கும் வேலை வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
  இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலர் இரா. நடராசன், விவசாய சங்கப் பொறுப்பாளர் ம. மருதையா, விவசாயத் தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் ரா. ராஜகோபால், முருகையா, க. மாரியப்பன், பே. மாரியப்பன், செயலர்கள் பி. செல்லத்துரை (சங்கனாப்பேரி), கருப்பசாமி(கூடலூர்), மங்களா பாண்டியன் (ஆத்துவழி),  நகரக் கிளை நிர்வாகிகள் மாரி, பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai