மனிதநேயமே என் எழுத்தின் சாரம்: ஜோ டி குருஸ்

மனிதநேயமே என் எழுத்தின் சாரம்என்றார் சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் ஜோ டி குருஸ்.

மனிதநேயமே என் எழுத்தின் சாரம்என்றார் சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் ஜோ டி குருஸ்.
திருநெல்வேலி "மேலும்' இலக்கிய அமைப்பின் சார்பில், எழுத்தாளர் ஜோ டி குருஸ் உடன் சந்திப்பு மற்றும் படைப்பிலக்கியம் குறித்த உரையாடல் பாளையங்கோட்டை மகாராஜநகரில் நடைபெற்றது. அமைப்பின் நிறுவனர் பேராசிரியர் "மேலும்' சிவசு நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்து உரையாற்றினார். அமைப்பின் தலைவர் பேராசிரியர் வே.கட்டளை கைலாசம் வரவேற்றுப் பேசினார். செயலர் பேராசிரியர் செளந்தர மகாதேவன் எழுத்தாளர் ஜோ டி குருஸ் குறித்து அறிமுகவுரையாற்றினார்.
திருநெல்வேலி அகில இந்திய வானொலியின் நிகழ்ச்சிப் பொறுப்பாளர் ஜான்பிரதாப் குமார், அறிவிப்பாளர் கவிப்பாண்டியன், பேராசிரியர்கள் தனஞ்செயன், ஜனார்த்தனன், ரமேஷ், எம்.எம்.தீன், சுப்ரா, பாப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட ஜோ டி குருஸ் பேசியதாவது: ஆழிசூழ் உலகு, கொற்கை இரு நாவல்களிலும் கட்டுமரம், பாய்மரக் கப்பல் செலுத்தும் மீனவர்களின் இனவரைவியல் வாழ்வை இயல்பாக முன்வைத்தேன். அம்மக்களின் அன்பான வாழ்வியலும் அன்றாடப் பாடுகளும் என்னை எழுதத் தூண்டின. ஒரு பிரச்னையை தீர்க்க வேண்டுமானால் அதன் அருகில் சென்று பார்க்க வேண்டும். அப்போதுதான் அதன் ஆணிவேரை நம்மால் அறியவும் உணரவும் முடியும். அதற்காக கடற்கரை சார்ந்த களப் பணியை நான் தொடர்ந்து செய்தேன். எனக்கு கதை கூறியவர்கள் போத்திமார் எனும் என் கடற்கரைப் பாட்டிகள், தாத்தாக்கள்.
எந்தப் பாதுகாப்பு சாதனங்களும் இல்லாமல் கடலுக்குள் என் முன்னோர் மீன்பிடிக்கச் சென்றபோது, வண்ண மீன்களைக் கண்டு ரசித்தபடி நாங்கள் கடலில் பூங்காக்கள் கண்டோம் என்று ரசனையோடு அவர்கள் கூறியது என்னை கடல்மேல் காதல்கொள்ள வைத்தது. 
தமிழகத்தைத் தாக்கிய சுனாமியால் கடற்கரை சார்ந்து வாழும் மீனவ மக்களின் வாழ்வியல் நிலை வெட்டவெளிச்சமானது. கடல் குறித்த புரிதல் பொதுச் சமூகத்துக்கு  சரியாகத் தரப்படவேண்டும் என்பதற்காக நான் எழுதத் தொடங்கினேன்.
எட்டு நாள்கள் பயணப்பட்டு ஆழ்கடலுக்குச் சென்று, இரண்டு நாள்கள் இரவு பகலாக மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு மீன்களுக்கான சரியான விலை கிடைக்கிறதா எனக் கேட்டால் இல்லை எனும் பதில் என்னை வெகுவாகப் பாதித்தது. 
அடித்தள மக்களின் பொருளாதாரச் சுரண்டல்களைப் பொதுமக்களுக்கும் அரசுக்கும் உணர்த்தவே நான் எழுதத் தொடங்கினேன். கண் எதிரே நான் கண்ட மனிதநேயத்தை நான் பார்த்த, வசித்த நிலப்பரப்பின் பின்னணியில் என் வட்டார மொழிநடை சார்ந்து எழுதுகிறேன். வாழ்க்கைக்கான உண்மையான பதிவு இலக்கியம். கண்ணாடி முன்நிற்கும்போது நாம் போட்ட வேடத்தை அது எப்படி மறைக்காமல் காட்டுமோ, அதேபோல் என் எழுத்துகளில் பல முகங்கள் தெரிகின்றன. மெரீனா புரட்சி எனக்கு நம்பிக்கை தந்துள்ளது. என் மண் காக்கப்படும், என் மக்கள் காக்கப்படுவர் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றார் அவர்.
பேராசிரியர்கள், திறனாய்வாளர்கள், ஆய்வு மாணவர்களின் வினாக்களுக்கு ஜோ டி குரூஸ் விடையளித்தார். ஜோ டி குருஸ் படைப்புலகம் குறித்த விமர்சன விவாதங்கள்  நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com