ஆதிதிராவிடர் நல விடுதி மாணவர் சேர்க்கை: ஜூலை 2இல் தேர்வுகுழுக் கூட்டம் தொடக்கம்
By DIN | Published On : 28th June 2019 07:06 AM | Last Updated : 28th June 2019 07:06 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல விடுதிக்கான தேர்வுக்குழு கூட்டம் வரும் ஜூலை 2 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.
இது குறித்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் 64 ஆதிதிராவிட நலப் பள்ளி விடுதிகளும், 8 கல்லூரி விடுதிகளும் உள்ளன. இந்த விடுதிகளுக்கு நிகழ் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கான தேர்வுக்குழு கூட்டம் வரும் ஜூலை 2ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்கி நடைபெறுகிறது. சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் பேரவைத் தொகுதிகளுக்கான தேர்வுக்குழுக் கூட்டம், சங்கரன்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜூலை 2 ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும்.
அம்பாசமுத்திரம் பேரவைத் தொகுதிக்கான கூட்டம் அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜூலை 3 ஆம் தேதி (புதன்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெறும். ராதாபுரம், நான்குனேரி பேரவைத் தொகுதிகளுக்கான் கூட்டம் நான்குனேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜூலை 4 ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெறும்.
திருநெல்வேலி, பாளையங்கோட்டை பேரவைத் தொகுதிகளுக்கான் கூட்டம், திருநெல்வேலி மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் ஜூலை 5 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெறும். தென்காசி, கடையநல்லூர், ஆலங்குளம் பேரவைத் தொகுதிகளுக்கு, தென்காசி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜூலை 9 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெறும்.
திருநெல்வேலி, பாளையங்கோட்டை, குற்றாலம் கல்லூரி விடுதிகளுக்கான மாணவர் சேர்க்கை மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் வரும் ஜூலை 18 ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.