வடகரையில் வாழைகளை சேதப்படுத்திய காட்டு யானைகள்
By DIN | Published On : 28th June 2019 09:25 AM | Last Updated : 28th June 2019 09:25 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாவட்டம், வடகரை பகுதியில் காட்டு யானைகள் கூட்டமாக வந்து புதன்கிழமை இரவு அட்டகாசம் செய்ததில், சுமார் 700 வாழை மரங்கள் சேதமடைந்தன.
செங்கோட்டை அருகேயுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது வடகரை கிராமம். இப்பகுதி விவசாயிகள் தென்னை, வாழை, மா, கத்தரி, பலா உள்ளிட்டவற்றை பயிர்செய்துள்ளனர். இந்நிலையில், சனிக்கிழமை இரவு உணவு மற்றும் தண்ணீர் தேடி வந்த காட்டு யானைகள் கூட்டம் வடகரை மேட்டுகால் பகுதியைச் சேர்ந்த முகம்மது உசேனுக்கு சொந்தமான விளைநிலத்தில் புகுந்து 500-க்கும் மேற்பட்ட குலைதள்ளிய வாழை மரங்களையும், கனி என்பவருக்குச் சொந்தமான சுமார் 250 வாழை மரங்களையும் சேதப்படுத்தியுள்ளது. இவற்றின் மதிப்பு சுமார் ரூ. 1.5 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
இதுகுறித்து தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கச் செயலர் ஜாகீர் உசேன், நகரப் பொறுப்பாளர் முகமது இஸ்மாயில் ஆகியோர் வைத்த கோரிக்கையின் அடிப்படையில், சம்பவ இடத்தை செங்கோட்டை வாட்டாட்சியர் ஒசானாபெர்னாட்டோ பார்வையிட்டார். அவருடன் பண்பொழி வருவாய் ஆய்வாளர் குமார், வடகரை கிராம நிர்வாக அலுவலர் மகேஷ், உதவியாளர் சேதுராமலிங்கம் மற்றும் வனத் துறை ஊழியர்கள் வந்திருந்தனர்.
காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத் துறையினருக்கு செங்கோட்டை வாட்டாட்சியர் உத்தரவிட்டார்.