"ராணுவ வீரர்களின் உயிர் தியாகத்தை அரசியலாக்குவது அநாகரிகம்'
By DIN | Published On : 02nd March 2019 06:58 AM | Last Updated : 02nd March 2019 06:58 AM | அ+அ அ- |

ராணுவ வீரர்களின் உயிர் தியாகத்தை அரசியலாக்குவது அநாகரிகமானது என்றார் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் என்.ஆர்.தனபாலன்.
வள்ளியூரில் வெள்ளிக்கிழமை பெருந்தலைவர் மக்கள் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது: ராணுவ வீரர்களின் உயிர் தியாகம் நம்மை நிலைகுலையச் செய்துள்ளது. தீவிரவாதிகளுக்கு சரியான நேரத்தில் பதிலடி கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இந்திய மக்கள் அனைவரிடமும் எழுந்தது. ஆனால், ராணுவ வீரர்களின் உயிர் தியாகத்தை அரசியலாக்குவது அநாகரிகமானதாகும். இந்த போக்கு கண்டிக்கத்தக்கது.
தமிழகத்தில் எந்த பிரச்னையையும் அரசியலாக கருதும் போக்கு அதிகரித்துள்ளது. ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஆளும் அரசுக்கு ஆதரவாக இருக்கமாட்டார்கள் என்பதால் அவர்கள் மீது அடக்குமுறை நடத்தப்படுகிறது. ஆண்டுக்கு 500 மதுக்கடைகளை மூடுவதாக அறிவித்த தமிழக அரசு ஒரு கடையைக் கூட மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. பொய் வழக்குக்களை பதிந்து பதநீர் இறக்கும் தொழிலாளர்களை முடக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சமூக ஆர்வலர் முகிலன் எங்கு இருக்கிறார் எனத் தெரியவில்லை. அரசு உடனடியாக முகிலனை கண்டுபிடித்து மக்கள் மத்தியில் நிறுத்த வேண்டும். அதிமுகவுடன் பாமக கூட்டணி அமைத்திருப்பது சந்தர்ப்பவாதம்தான். தமிழகத்தில் திமுக கூட்டணி 100 சதவீதம் வெற்றிபெறும். திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டத்தில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்படும் மீன்அரவை ஆலைகளை மூட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.