நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பதில் தாமதம்: விவசாயிகள் தவிப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் மத்திய அரசு நிதியுதவியுடன் திறக்கப்படும் என உறுதியளிக்கப்பட்ட நெல்

திருநெல்வேலி மாவட்டத்தில் மத்திய அரசு நிதியுதவியுடன் திறக்கப்படும் என உறுதியளிக்கப்பட்ட நெல் கொள்முதல் நிலையங்களைத் திறப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரவருணி மற்றும் சிற்றாறு வடிநிலக் கோட்டங்களின் கீழ் பிசானம் மற்றும் கார் பருவ சாகுபடியின் கீழ் நெல் பயிரிடப்பட்டு வருகிறது. 2018-19ஆம் நிதியாண்டில் கார் பருவத்தில் ஏற்கெனவே 16 ஆயிரத்து 837 ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. 
இப்போது பிசான பருவத்தில் 63 ஆயிரத்து 108 ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஐ.ஆர்.-20, பொன்னி, ஏடிடி 45 உள்ளிட்ட ரகங்கள் பயிரிடப்பட்டுள்ளன. கோடைக் காலத்தில் கால்நடைகளுக்கு வைக்கோல் தேவைக்காக அம்பை-16 ரகமும் பலர் சாகுபடி செய்துள்ளனர். கோடைமேழலகியான், கன்னடியன் கால்வாய் பாசனப் பகுதிகளில் அறுவடைப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
செங்கோட்டை, வடகரை, கடையம், ஆலங்குளம் சுற்றுவட்டாரங்களிலும் அறுவடை தீவிரமடைந்துள்ளது. ஆனால், போதிய நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாததால் விவசாயிகள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
பணம் கிடைப்பதில் தாமதம்: இதுகுறித்து வடகரையைச் சேர்ந்த விவசாயி ஜாகிர் கூறியது: பிசான பருவ சாகுபடியில் நெல் மகசூல் நன்றாக உள்ளது. ஆனால், அதனை தனியார் மொத்த வியாபாரிகள் மிகவும் குறைந்த விலைக்கு வாங்கி லாபம் சம்பாதிக்க நினைக்கிறார்கள். அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கிலோ ரூ.18.40-க்கு வாங்க உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், தனியார் வியாபாரிகள் கிலோ ரூ.10-க்கு மட்டுமே வாங்குகிறார்கள். 
தமிழ்நாடு வாணிபக் கழகம் மற்றும் இந்திய உணவுக் கழகம் ஆகியவை சார்பில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் உறுதியளிக்கப்பட்டிருந்தது. ஆனால், போதுமான அளவில் திறக்கப்படவில்லை. அதேபோல இப்போது அமைக்கப்பட்டுள்ள அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து விவசாயிகளுக்கு பணம் கிடைப்பது தாமதமாகி வருகிறது. 3 நாள்களுக்குள் பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்தும் நிலை மாறி 20 நாள்கள் கழித்துதான் பணம் கிடைத்து வருகிறது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தேவையான இடங்களில் கூடுதலாக நெல் கொள்முதல் நிலையங்களை விரைவாக அமைக்க வேண்டும் என்றார்.
மழை வந்தால் சிக்கல்: இதுகுறித்து நொச்சிக்குளத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் கூறியது: பாளையங்கால்வாய் பாசனப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக அறுவடை நடைபெற்று வருகிறது. முன்னீர்பள்ளத்தைத் தவிர பிற பகுதிகளில் அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படவில்லை. மத்திய அரசு நிதியுதவியோடு இந்திய உணவுக் கழகம் மூலம் கொள்முதல் செய்யப்படும் என மாவட்ட நிர்வாகத்தினர் தெரிவித்திருந்தனர். 
ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. பல நெல் மூட்டைகளை களத்துமேடுகளில் அடுக்கி வைத்துள்ளோம். கோடை மழை திடீரென பெய்தால் நெல் மூட்டைகள் நனைந்து வீணாகும் அபாயம் உள்ளது. ஆகவே, விரைவாக நெல்லை கொள்முதல் செய்ய மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


7,261 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்
வேளாண்துறை அதிகாரிகள் கூறியது: திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் 45 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த 20 நாள்களாக கொள்முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை 7 ஆயிரத்து 261 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு அதற்கான தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. 
இந்திய உணவுக் கழகம் சார்பில் கொள்முதல் நிலையம் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இன்னும் சில நாள்களில் அவை தொடங்கும் வாய்ப்புகள் உள்ளன. அதன்மூலம் விவசாயிகள் பயன்பெறுவார்கள் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com