திமுகவுக்கு நெல்லை தொகுதி வேட்பாளர் போட்டியில் 32 பேர்!

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திருநெல்வேலி மக்களவைத் தொகுதி திமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திருநெல்வேலி மக்களவைத் தொகுதி திமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், வேட்பாளர் போட்டியில் 32 பேர் உள்ளனர். அவர்களில் மண்ணின் மைந்தருக்கு வாய்ப்பளித்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என தொண்டர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தென் தமிழகத்தில் நட்சத்திர அந்தஸ்து பெற்ற தொகுதியாக திருநெல்வேலி திகழ்கிறது. மத்திய இணையமைச்சர்களை உருவாக்கிய பெருமை இத் தொகுதிக்கு உண்டு. தொகுதி மறுவரையறைக்குப் பின்பு திருநெல்வேலி, பாளையங்கோட்டை, ராதாபுரம், ஆலங்குளம், அம்பாசமுத்திரம், நான்குனேரி ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகள் திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் உள்ளன. இதில் 3 சட்டப்பேரவைத் தொகுதிகள் திமுக வசமும், ஒரு தொகுதி காங்கிரஸ் வசமும் உள்ளன. 2 தொகுதிகள் மட்டும் அதிமுகவிடம் உள்ளன.
திமுகவுக்கு ஒதுக்கீடு: மக்களவைத் தேர்தலுக்காக தமிழகத்தில் திமுக தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திருநெல்வேலி தொகுதியை கேட்டு திமுக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவியது. ஏனெனில், 1952, 1957, 1962, 2004, 2009 தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். 
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் சுற்றுப்பயணத்தால் நகரம் முதல் குக்கிராமங்கள் வரை தங்கள் கட்சிக்கு தொண்டர் பலம் உள்ளது, அதனால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ள திருநெல்வேலி தொகுதியை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என காங்கிரஸ் வற்புறுத்தியது. அதேநேரத்தில் திமுகவினரும் தங்கள் வெற்றியையும், பலத்தையும் சுட்டிக் காட்டினர். 
இத் தொகுதியில் திமுக கூட்டணியில் இருந்த சுதந்திரா கட்சி வேட்பாளர் எஸ்.சேவியர் 1967 ஆம் ஆண்டிலும், திமுக சார்பில் டி.எஸ்.ஏ.சிவப்பிரகாசம் 1980 மற்றும் 1996 ஆம் ஆண்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளதை திமுகவினர் சுட்டிக் காட்டுகின்றனர். 2009 தேர்தலில் காங்கிரஸ்- திமுக கூட்டணியில் காங்கிரஸ் வெற்றி பெற்றதையும் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதுதவிர கன்னியாகுமரி தொகுதியை காங்கிரஸுக்கு விட்டுக் கொடுப்பதாலும், தமிழகத்தின் முக்கிய நகரங்களான கோவை, மதுரை போன்றவை கூட்டணிக் கட்சியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாலும், வரலாற்று முக்கியத்துவம் மிகுந்த திருநெல்வேலி தொகுதி தங்களுக்கு தேவை எனக் கூறி இந்த முறை திருநெல்வேலி தொகுதியை திமுக கைப்பற்றியுள்ளது.
வெற்றியே இலக்கு: இதுகுறித்து திமுக தொண்டர்கள் கூறியது: திருநெல்வேலி தொகுதி கிடைத்ததே முதல் வெற்றியாகும். இது, திமுக தொண்டர்களுக்கு உத்வேகத்தை அளித்துள்ளது. திமுகவில் கிழக்கு, மேற்கு, மத்திய மாவட்டங்களில் உள்ள கட்சியின் அனைத்து அணியினரும், கூட்டணிக் கட்சித் தொண்டர்களுடன் இணைந்து பணியாற்றுவோம். கடந்த 5 ஆண்டுகளாக அதிமுகவை சேர்ந்த மக்களவை உறுப்பினரால் குறிப்பிடும்படியான பணிகள் இத் தொகுதியில் நடைபெறவில்லை. அதனை எங்களது பிரசாரத்தில் முன்வைப்போம். சிறுபான்மையின மக்கள் கணிசமாக வசிக்கும் தொகுதி என்பதால் திமுகவுக்கு தனிப்பட்ட வாக்கு வங்கி உள்ளது. அதனுடன் கூட்டணிக் கட்சிகளின் வாக்குகளும் சேரும்போது எங்களது வெற்றி உறுதியாகிவிடும் என்றனர்.
வேட்பாளர் போட்டி: திமுக வேட்பாளர் பட்டியல் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 17) அறிவிக்கப்பட உள்ள நிலையில், வேட்பாளர் போட்டியில் 32 பேர் உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கிழக்கு மாவட்ட பொருளாளர் ஞானதிரவியம், அவரது மகன் ராஜா, மாநில வர்த்தக அணி பொறுப்பாளர் கிரகாம் பெல், தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகி எட்வின், தொழிலதிபர்கள் ரவி,  நடராஜன், ராதாபுரம் ஒன்றியச் செயலர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் உள்பட மொத்தம் 32 பேர் வேட்பாளர் போட்டியில் உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரும் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடும் முயற்சியில் உள்ளார். ஆனால், கடந்த முறை சென்னை தொழிலதிபருக்கு வாய்ப்பளித்தபோதே முகம் சுளித்த உள்ளூர் தொண்டர்கள், இம் முறை கண்டிப்பாக மண்ணின் மைந்தருக்கே வாய்ப்பளிக்க வேண்டுமென  வலியுறுத்தி வருகிறார்கள். ஆளும் மத்திய-மாநில அரசுகளுக்கு எதிரான அலை வீசும் என்பதால் வெற்றி பெற முடியும் என திமுகவினர் நம்புகின்றனர். 

கூட்டணி வாக்குகளின் பலம்!
திருநெல்வேலி தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் 2009 இல் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.எஸ்.ராமசுப்பு 2 லட்சத்து 74 ஆயிரத்து 932 வாக்குகளைப் பெற்று அதிமுக வேட்பாளரான அண்ணாமலையை தோற்கடித்தார். 
2014 ஆம் ஆண்டு தேர்தலில் இப்போது திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் குறிப்பிடத்தக்க வாக்குகளைப் பெற்றன. அதன்படி திமுக 2 லட்சத்து 72 ஆயிரத்து 40 வாக்குகளும், காங்கிரஸ் 62ஆயிரத்து 863 வாக்குகளும் பெற்றுள்ளன. இதுதவிர மதிமுக, விடுதலைச்சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்டவற்றின் வாக்குகளும் உள்ளன. அதனால் இம் முறை திமுக கூட்டணிக்கு திருநெல்வேலி தொகுதியில் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தொண்டர்கள் உள்ளனர்.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com