ஆழ்வார்குறிச்சி அருகே நெற்பயிரை நாசப்படுத்தும் யானைகள் கூட்டம்: இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

திருநெல்வேலி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி அருகேயுள்ள பெத்தான்பிள்ளைக் குடியிருப்புப் பகுதியில் புகுந்து யானைகள் தொடர்ந்து நெற்பயிர்களை

திருநெல்வேலி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி அருகேயுள்ள பெத்தான்பிள்ளைக் குடியிருப்புப் பகுதியில் புகுந்து யானைகள் தொடர்ந்து நெற்பயிர்களை நாசப்படுத்தி வருகின்றன. இதனால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளதோடு, நாசமடைந்த நெற்பயிருக்கு அரசு இழப்பீடு வழங்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 8, 11 ஆம் தேதிகளில் யானைகள் வயலுக்குள் புகுந்து நெற்பயிர்களை நாசப்படுத்தியதை அடுத்து, வனத் துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். என்றபோதும், சனிக்கிழமை அதிகாலை 5 மணியளவில் வனப் பகுதியிலிருந்து வெளியேறிய யானைகள் கூட்டம் பெத்தான்பிள்ளைக் குடியிருப்பு மற்றும் அரசபத்துக் கால்வாயைக் கடந்து அந்தோணிராஜ் என்பவரின் வயலுக்குள் புகுந்து சுமார் 1 ஏக்கரில் நெற்பயிரை அழித்துச் சென்றுள்ளன.
இதுகுறித்து அந்தோணிராஜ் கூறுகையில், இந்தப் பகுதியில் இதுவரை காட்டுப் பன்றிகளுக்குப் பயந்துதான் விவசாயம் செய்துவந்தோம். இப்போது, யானைகள் ஊர் மற்றும் கால்வாயைக் கடந்து வயலுக்குள் புகுந்து நெற்பயிரை நாசப்படுத்தி வருகின்றன. முன்பு, இரவு நேரத்தில் மட்டுமே வந்துகொண்டிருந்த யானைகள், இப்போது நன்றாக விடிந்தபிறகும் குடியிருப்புப் பகுதியைக் கடந்து வருவதால், பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியில் வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அறுவடைக்கு இன்னும் 10 நாள்களே உள்ள நிலையில், யானைகள் வந்து பயிர்களை நாசப்படுத்துவதால், முன்கூட்டியே நெற்பயிரை அறுவடை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், நெல்லுக்கு உரிய விலை கிடைக்காது. எனவே, அரசு உரிய இழப்பீடு வழங்கவேண்டும். மேலும், இது தொடர்ந்தால் யானைகளைக் கட்டுப்படுத்த முடியாது என்பதால், யானைகள் உள்ளிட்ட விலங்குகள் ஊருக்குள் வராமல் இருக்க, மாவட்ட நிர்வாகம் நிரந்தரத் தீர்வுகாண உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com