தேர்தல் கட்டுப்பாடுகள்: நெல் விற்ற பணத்தை பெற முடியாமல் விவசாயிகள் அவதி

திருநெல்வேலி மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் நெல் விற்பனை செய்த விவசாயிகள் அதற்குரிய பணத்தை பெறமுடியாமல் தவித்து வருகின்றனர்.


திருநெல்வேலி மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் நெல் விற்பனை செய்த விவசாயிகள் அதற்குரிய பணத்தை பெறமுடியாமல் தவித்து வருகின்றனர்.
மக்களவைத் தேர்தல் தேதி கடந்த 10 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அன்றுமுதல் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. 
திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு பேரவை தொகுதிக்கு மூன்று பறக்கும் படைகள் வீதம், 30 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு மார்ச் 10 முதல் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
கடையநல்லூர், சுரண்டை, அம்பாசமுத்திரம் வட்டாரப் பகுதிகளில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு, பல இடங்களில் அறுவடை முடிந்து நெல் விற்பனையும், சில இடங்களில் அறுவடைப் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
 நெல் அறுவடை செய்யப்படும் இடங்களிலேயே வியாபாரிகள் நெல்லை வாங்கிச் செல்லும் நிலை தற்போது உள்ளது.
பொதுவாக, நெல் விற்பனை செய்யப்பட்ட நாளில் இருந்து ஒருவாரத்திற்குள் விவசாயிகளுக்கு வியாபாரிகள் பணம் கொடுப்பது வழக்கம். 
ஆனால், தற்போது தேர்தல் விதிகள் அமலில் இருக்கும் சூழலில், பறக்கும் படையினர் தொடர் ஆய்வில் ஈடுபட்டு வருவதால், நெல்லுக்குரிய பணத்தைப் பெறுவதில் விவசாயிகளுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.
நெல்லை வாங்கிச் சென்ற உள்ளூர் வியாபாரிகள், அதை மொத்த வியாபாரிகளிடம் விற்று, அவர்களிடம் இருந்து பணத்தை பெற்றுவருவதிலும் சிக்கல் நீடித்து வருகிறது. இதனால், ஏற்கெனவே கடன் பெற்று சாகுபடி செய்த விவசாயிகள் பெரும் வேதனை அடைந்துள்ளனர். 
நெல்லை விற்று கிடைக்கும் பணத்தைக் கொண்டுதான் அடுத்த சாகுபடியை மேற்கொள்ள முடியும் என்ற நிலையில், அடுத்து என்ன செய்வது என தெரியாமல் விவசாயிகள் அவதியுற்று வருகின்றனர்.
இந்நிலையில், விவசாயிகளுக்கு  பணம் கொடுப்பதில் இருக்கும் இடையூறுகளை களைவதற்கான உரிய நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com