குடிநீர்த் தட்டுப்பாடு: பெண்கள் போராட்டம்

குடிநீர்த் தட்டுப்பாட்டை போக்கக் கோரி திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் பெண்கள் திங்கள்கிழமை தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடிநீர்த் தட்டுப்பாட்டை போக்கக் கோரி திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் பெண்கள் திங்கள்கிழமை தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேர்தல் நடத்தைவிதிகள் காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மனு அளிக்க வரும் பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தின் தரைத்தளத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் மனுக்களை போட்டுச் செல்கிறார்கள். இந்நிலையில், குடிநீர்த் தட்டுப்பாட்டைத் தீர்க்கக் கோரி ஆலங்குளம் அருகேயுள்ள ரதமுடையார்குளத்தைச் சேர்ந்த மக்கள் மனு அளிக்க வந்தனர். ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளிக்க வழியில்லாததால் பெட்டியில் மனுவை போட்டுவிட்டு ஆட்சியர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து போராட்டக்காரர்கள் கூறியது: ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் உள்ள குறிச்சாம்பட்டி ஊராட்சியில் கரையாளனூர், ரதமுடையார்குளம், குறிச்சாம்பட்டி ஆகிய கிராமங்கள் உள்ளன. ரதமுடையார்குளத்தில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதிக்கு வாரத்தில் இரு நாள்கள் தாமிரவருணி குடிநீரும், வீட்டு உபயோகத்திற்காக தினமும் நிலத்தடி நீரும் விடுவது வழக்கம். ஆனால், கடந்த 20 நாள்களாக குடிநீர் விநியோகிக்கப்படாமல் உள்ளது. குடிநீர்த் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். வீட்டு உபயோகத்திற்கு நிலத்தடி நீரை பெறுவதற்கு 3 கி.மீ. தொலைவு சென்று தனியார் கிணறுகளின் உரிமையாளர்களிடம் கெஞ்ச வேண்டிய நிலை உள்ளது. மாவட்ட ஆட்சியர் உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
சுப்புலாபுரம் மக்கள் சார்பில் மனு: சங்கரன்கோவில் அருகேயுள்ள சுப்பலாபுரம் திருப்பூர் குமரன்நகர் பகுதி மக்கள் சார்பில் ஆட்சியர் அலுவலக பெட்டியில் போடப்பட்ட மனு: திருப்பூர் குமரன் நகரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் ஊரில் ஊராட்சி மூலம் குடிநீர் இணைப்பு கொடுக்கப்படவில்லை.  கோடைக் காலம் ஆரம்பித்துவிட்டதால் நிலத்தடி நீரும் பற்றாக்குறை ஆகிவிட்டது. இந்நிலையில், எங்கள் ஊரில் ஆழ்துளைக் கிணறு தோண்டி  நிலத்தடி நீரை எடுத்து சுத்திகரித்து சிலர் விற்பனை செய்து வருகிறார்கள். இதனால் நிலத்தடி நீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. எங்கள் பகுதிக்கு தாமிரவருணி குடிநீர் விநியோகிக்கவும், நிலத்தடி நீரைப்  பாதுகாக்கவும்  மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com