சங்கரன்கோவிலில் அதிமுக கூட்டணிக் கட்சிகள் ஆலோசனை
By DIN | Published On : 24th March 2019 01:04 AM | Last Updated : 24th March 2019 01:04 AM | அ+அ அ- |

சங்கரன்கோவிலில் சட்டப்பேரவைத் தொகுதி சார்பில் அதிமுக கூட்டணி கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தென்காசி மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சி சார்பில் புதிய தமிழகம் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து அதிமுக கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் மாவட்டச் செயலர் தச்சை கணேசராஜா தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் அமைச்சர்கள் ராஜலட்சுமி, ராஜேந்திரபாலாஜி,புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி, திருநெல்வேலி அதிமுக வேட்பாளர் மனோஜ்பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர்.
கூட்டத்தில் பேசிய ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி, தென்காசி மக்களவைத் தொகுதியில் புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். அதற்காக நாம் கடுமையாக உழைக்க வேண்டும் என்றார்.
இதையடுத்து பேசிய அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, பிரிவினைவாதிகளிடமிருந்தும், தீவிரவாதிகளிடமிருந்தும் நாட்டைக் காப்பாற்ற இந்தியாவுக்கு வலிமையான தலைவர் வேண்டும் என்றால் மோடிதான் மீண்டும் பிரதமராக வரவேண்டும் என்றார்.
இதையடுத்து டாக்டர் கிருஷ்ணசாமி பேசியதாவது:
நான் 6ஆவது முறையாகப் போட்டியிடுகிறேன். அதிமுக நிர்வாகிகள், தொண்டர்களைப் பொருத்தவரை கூட்டணி தர்மத்தைக் கடைப்பிடிப்பவர்கள். கடுமையாக உழைக்கக் கூடியவர்கள். உண்மை என்றால் அது அதிமுக. விசுவாசம் என்றால் அது அதிமுக. தோழமை என்றால் அது அதிமுகதான் என்றார் அவர்.
கூட்டத்தில், இந்து முன்னணி தலைவர் அர்ஜீன்சம்பத், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மனோகரன், செல்வமோகன்தாஸ் பாண்டியன், முன்னாள் நகர்மன்றத் தலைவர் கே.கண்ணன், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற துணைச் செயலர் ரவிச்சந்திரன், தேமுதிக மாவட்ட அவைத் தலைவர் முத்துக்குமார், பாஜக சார்பில் சுப்பிரமணியன், வெங்கடேஸ்வரப்பெருமாள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
முன்னதாக சங்கரன்கோவில்-கழுகுமலை சாலையில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் அலுவலகத்தை கிருஷ்ணசாமி திறந்துவைத்தார்.