முன்னீர்பள்ளத்தில் போலீஸார் அணிவகுப்பு ஒத்திகை
By DIN | Published On : 24th March 2019 03:46 AM | Last Updated : 24th March 2019 03:46 AM | அ+அ அ- |

மக்களவைத் தேர்தலையொட்டி முன்னீர்பள்ளத்தில் போலீஸார் அணிவகுப்பு ஒத்திகை சனிக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தம் 2,979 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் பதற்றமான, மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளைத் தேர்ந்தெடுத்து அங்கு ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
காவல் துறையின் பாதுகாப்பை விளக்கும் வகையிலும், பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க முன்வரச் சொல்லும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் போலீஸார் துப்பாக்கி ஏந்தி அணிவகுப்பு நடத்தி வருகின்றனர். அதன்படி ஏற்கெனவே திருநெல்வேலிக்கு வந்துள்ள இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் திருநெல்வேலி நகரத்தில் அணிவகுப்பு ஒத்திகை நடத்தினர்.
இந்நிலையில் திருநெல்வேலி மாவட்ட காவல் துறை சார்பில் முன்னீர்பள்ளம் காவல் நிலையத்துக்கு உள்பட்ட கீழமுன்னீர்பள்ளம், மேலமுன்னீர்பள்ளம், கோபாலசமுத்திரம், தருவை பகுதிகளில் அணிவகுப்பு ஒத்திகை சனிக்கிழமை நடைபெற்றது. சேரன்மகாதேவி உதவி காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ்ராவத் தலைமை வகித்தார். முன்னீர்பள்ளம் காவல் ஆய்வாளர் மாரியப்பன் தலைமையில் 150-க்கும் மேற்பட்ட காவலர்கள் துப்பாக்கியுடன் அணிவகுப்பில் பங்கேற்றனர்.