வாக்குப்பதிவை அதிகரிக்க நூதனம்: நெல்லை மாநகராட்சி நடவடிக்கை
By DIN | Published On : 24th March 2019 03:46 AM | Last Updated : 24th March 2019 03:46 AM | அ+அ அ- |

மக்களவைத் தேர்தலில் வாக்குப்பதிவை அதிகரிக்கச் செய்யும் வகையில் விழிப்புணர்வு வாசகத்துடன் கூடிய ரசீதுகள் திருநெல்வேலி மாநகராட்சி சார்பில் வழங்கப்படுகின்றன.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 18இல் ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. 100 சதவீத வாக்குப்பதிவுக்காக இந்திய தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. திருநெல்வேலி ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் உத்தரவின்பேரில் திருநெல்வேலி மாநகரப் பகுதியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்ஒரு பகுதியாக மாநகராட்சியில் வரி வசூலுக்குப் பின்பு வழங்கப்படும் ரசீதுகளில் 18.4.19அன்று வாக்காளர்களாகிய நாம் அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு வாசகம் இடம்பெற்றுள்ளது.
இந்த நடவடிக்கையை பாளையங்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் பி.விஜயலட்சுமி சனிக்கிழமை தொடக்கிவைத்து ரசீதுகளை விநியோகித்தார். மாநகராட்சி தலைமைப் பொறியாளர் வி. நாராயணன்நாயர், உதவி செயற்பொறியாளர் பாஸ்கர், கண்காணிப்பாளர் சுப்பிரமணியன், உதவி வருவாய் அலுவலர் காசிவிஸ்வநாதன், முத்துதுரை உள்பட பலர் கலந்துகொண்டனர்.