Enable Javscript for better performance
கலாசார மாற்றத்தால் அழியும் சிட்டுக் குருவிகள்: சுற்றுச்சூழல் விஞ்ஞானி- Dinamani

சுடச்சுட

    

    கலாசார மாற்றத்தால் அழியும் சிட்டுக் குருவிகள்: சுற்றுச்சூழல் விஞ்ஞானி

    By DIN  |   Published on : 28th March 2019 06:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கலாசார மாற்றத்தால் சிட்டுக் குருவிகள் அழிகின்றன என்றார் சுற்றுச்சூழல் விஞ்ஞானியும் பேராசிரியருமான ஏ.ஜி.முருகேசன்.
    ஆழ்வார்குறிச்சி ஸ்ரீ பரமகல்யாணி சுற்றுச்சூழல் அறிவியல் ஒப்புயர்வு மையத்தில், சிட்டுக்குருவிகளை அழிவில் இருந்து காப்பது மற்றும் மீள்பெருக்கம் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. 
    சுற்றுச்சூழல் விஞ்ஞானியும், மைய முதுநிலைப் பேராசிரியர் மற்றும் தலைவருமான ஏ.ஜி.முருகேசன் தலைமை வகித்து பேசியது: கடந்த 10 ஆண்டுகளில் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. நகரங்கள், கிராமங்களில் ஓடு மற்றும் கூரை வீடுகள் கான்கிரீட் வீடுகளாக மாறியது; தோட்டத்துடன் கூடிய வீடுகள் இருந்த நிலை மாறியது; சோளம், கேழ்வரகு, எள், உளுந்து போன்ற தானியங்கள் உற்பத்திக் குறைந்தது உள்ளிட்ட காரணங்களால் சிட்டு குருவிகள் வாழ்விடங்கள் இல்லாமலும் உணவு இல்லாமலும் எண்ணிக்கையில் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. 
    மேலும் விவசாயிகளின் நண்பனாகிய குருவிகள், பயிர்களிலுள்ள பூச்சிகளை உணவாக உள்கொண்ட நிலையில் பயிர்களுக்கு உரம் உள்ளிட்டவை பயன்படுத்துவதால் குருவிகளுக்கான பூச்சிகள் கிடைக்காத நிலை ஏற்பட்டது. பெருகிவரும் வாகனங்களின் நச்சுப்புகை, தீவிர நகரமயமாக்கல் போன்றவை சிட்டுக்குருவிகளின் அழிவிற்கு காரணமாகிறது. சிட்டுக் குருவிகளைப் பாதுகாக்க வீட்டு அருகே மரங்கள் வளர்ப்பது, குருவிகள் தங்குவதற்கு ஏற்ப சிறு கூடுகளை  அமைப்பது உள்ளிட்டவற்றை மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.
    தொடர்ந்து மாணவி கேப்ரியேல் சில்வியா பேசினார். மாணவர், மாணவிகளிடையே கலந்துரையாடல் நடைபெற்றது. பேராசிரியர் எஸ்.செந்தில்நாதன் வரவேற்றார். பேராசிரியர் ஆர்.சொர்ணம் நன்றி கூறினார். கருத்தரங்கில் ஆசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் பட்ட வகுப்பு மாணவர், மாணவிகள் கலந்துகொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai