Enable Javscript for better performance
தன்னம்பிக்கையுடன் உழைத்தால் வாழ்வில் வெற்றி நிச்சயம்: துணைவேந்தர் கே.பிச்சுமணி- Dinamani

சுடச்சுட

    

    தன்னம்பிக்கையுடன் உழைத்தால் வாழ்வில் வெற்றி நிச்சயம்: துணைவேந்தர் கே.பிச்சுமணி

    By DIN  |   Published on : 28th March 2019 06:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தன்னம்பிக்கையுடன் உழைத்தால் வாழ்வில் நிச்சயம் வெற்றிபெற முடியும் என்றார் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் கே.பிச்சுமணி. 
    பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரியின் பட்டமளிப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வர் மு. முஹம்மது சாதிக் வரவேற்றார். கல்லூரித் தாளாளர் த.இ. பத்ஹுர் ரப்பானி வாழ்த்திப் பேசினார்.  
    கல்லூரியின் ஆட்சிக் குழுத் தலைவர் பி.எஸ்.ஏ. பல்லாக் லெப்பை, ஆட்சிக்குழு உறுப்பினர்கள் எஸ்.செய்யது அப்துர் ரஹ்மான், கே.ஏ. மீரான் மைதீன், எம்.கே.எம். முஹம்மது நாசர், எல்.கே.எம்.ஏ. முஹம்மது நவாப் ஹுசைன்,   அரசு உதவிபெறா பாடப்பிரிவு இயக்குநர் ஏ. அப்துல் காதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
    சிறப்பு விருந்தினராக திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கே. பிச்சுமணி பங்கேற்று, மாணவர், மாணவியருக்கு பட்டங்களை வழங்கி பேசியது:  பட்டம் பெறும் நாள் உங்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மிக முக்கியமான நாள். இந்தியாவின் எதிர்கால வளர்ச்சிக்கு உங்கள் பங்களிப்பு முக்கியமானது. 
    இக்கல்லூரி தென்தமிழகத்தில் அரை நூற்றாண்டு காலம் உயர்கல்விப் பணியாற்றி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. நீங்கள்  தகவல் தொழில்நுட்ப யுகத்தில் வாழ்கிறீர்கள். பல்வேறு திறன்கள் இருந்தால் மட்டுமே வாழ்வில் வெற்றி பெற முடியும். நேர்மையாகவும், நேர் வழியிலும் சிந்தியுங்கள். வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையுடன் வாழ்ந்தால் நீங்கள் வாழ்வில் வெற்றியடையலாம். உங்கள் பழக்கங்களே உங்கள் செயல்களாக மாறும். உங்கள் எண்ணங்களில் கவனமாக இருங்கள். மொழியை நீங்கள் சிறப்பாகப் பயன்படுத்தத் தொடங்கினால் வெற்றி பெற முடியும். மின்னஞ்சல் அனுப்புதல், கட்டுரை எழுதுதல் ஆகியவற்றைச் சிறப்பாகக் கையாளக் கற்றுக்கொள்ளுங்கள். 
    தலைமைப் பண்பு, படைப்பாற்றலை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்களை நீங்களே செதுக்கிக் கொள்ளுங்கள். சாதிப்பவர்கள் தொடர்ந்து தங்களை மேம்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். புதுமைகளை விரும்புங்கள். நேரத்தை வீணாக்காமல் முறையாகப் பயன்படுத்துங்கள். 
    இக்காலகட்டத்தின் வேகத்திற்கு ஏற்ப உங்களைத் தயார் செய்து கொள்ளுங்கள். வேலைவாய்ப்புச் சந்தை, போட்டி மிகுந்ததாக மாறிவருகிறது. உங்களைக் காலத்திற்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ளுங்கள். புதிய சிந்தனைகளையும் தொழில்நுட்ப வளர்ச்சிகளையும் ஏற்றுக்கொண்டு அதில் வெற்றி பெறுவதற்கு அர்ப்பணிப்பு மனதுடன் கடினமாக உழைக்க வேண்டும் என்றார் அவர்.
    விழாவில், 765 பேருக்கு இளநிலைப் பட்டம், 115 பேருக்கு முதுநிலைப் பட்டம், 39 பேருக்கு இளம் முனைவோர் பட்டம் என மொத்தம் 919 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது. 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai