பராமரிப்பு இல்லாத நெல்லை ஈரடுக்கு மேம்பாலம்: அதிகரிக்கும் இருசக்கர வாகன விபத்துகள்

திருநெல்வேலியில் உள்ள ஈரடுக்கு மேம்பாலம் கடந்த 19 ஆண்டுகளுக்கும் மேலாக பராமரிப்புப் பணிகள்

திருநெல்வேலியில் உள்ள ஈரடுக்கு மேம்பாலம் கடந்த 19 ஆண்டுகளுக்கும் மேலாக பராமரிப்புப் பணிகள் செய்யப்படாமல், பாலத்தின் கீழ்ப் பகுதியில் தண்ணீர் தேங்கி விபத்துகள் அதிகரித்துள்ளது.
திருநெல்வேலி சந்திப்பு முதல் ஸ்ரீபுரம் வரை ஈரடுக்கு மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. 800 மீ. நீளம், 8 மீ. அகலம் கொண்ட இந்தப் பாலத்தில் 25 தூண்கள் உள்ளன. முதல் அடுக்கில் சைக்கிள்கள், இருசக்கர வாகனங்கள், நான்குசக்கர இலகுரக வாகனங்கள் செல்ல மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. மேல்பாலத்தில் பேருந்துகள், லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. கடந்த 2000 ஆவது ஆண்டில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அதன்பிறகு பராமரிப்பின்றி உள்ளது.
இந்தப் பாலத்தின் கீழ்ப் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, இருசக்கர வாகன நிறுத்துமிடமாக அறிவித்த பிறகு ஓரளவு போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ள நிலையில், மீண்டும் சிறிது சிறிதாக ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகின்றன. அதேநேரத்தில், கீழ்ப் பாலம் சந்திப்பு பகுதியுடன் இணையும் இடத்திலும், ஸ்ரீபுரத்தில் இருந்து தொடங்கும் பகுதியிலும் சாலை முறையாகப் பராமரிக்கப்படாமலும், கழிவுநீர் ஓடைகள் அமைக்கப்படாமலும் லேசான மழைக்கே தண்ணீர் தேங்கி விபத்துகள் ஏற்படுகின்றன. 
இதுகுறித்து வியாபாரிகள் கூறியது: நாட்டில் முதன்முதலாக நெல்லையில் கட்டப்பட்ட ஈரடுக்கு மேம்பாலத்திற்கு, அப்போதைய முதல்வர் கருணாநிதி திருவள்ளுவர் பாலம் என்று பெயர் சூட்டினார். இந்த ஊரின் அடையாளங்களுள் ஒன்றாக திகழ்ந்து வரும் இப்பாலத்தை முறையாக பராமரிக்காதது வேதனையளிக்கிறது. பருவமழை பெய்யும்போதெல்லாம் பாலத்தின் கீழ்ப் பகுதியில் மழைநீர் தேங்கி, கழிவுநீர் குட்டையாக மாறுகிறது. மழைநீர் எளிதாக வழிந்தோடும் வகையில் கழிவுநீர் ஓடை அமைக்க வேண்டும், தேங்கியிருக்கும் கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு நிரந்தரத் தீர்வு இல்லை. இப்போது பாலத்துடன் இணையும் சாலையும் குண்டும்-குழியுமாக உள்ளதால், தினமும் 10-க்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனங்களில் இருந்து கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் தனிக்கவனம் செலுத்தி, இந்தப் பாலத்தை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com