நெல்லையில் மக்களிடம்  வரவேற்பைப் பெற்ற நீரா பானம்

தென்னை மரத்தில் இருந்து இறக்கப்படும் நீரா பானத்துக்கு திருநெல்வேலி மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

தென்னை மரத்தில் இருந்து இறக்கப்படும் நீரா பானத்துக்கு திருநெல்வேலி மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
தென்னை மரத்தின் வெடிக்காத தென்னம்பாளைகளில் இருந்து குளிர் நிலையில் சொட்டு சொட்டாக எடுக்கப்படும் பால்தான் நீரா பானம். 
கேரளத்தில் நீரா பானத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்த நிலையில், கிராமப்புற வேலைவாய்ப்பைப் பெருக்கும் வகையிலும், விவசாயிகள் வருமானத்தை அதிகரிக்கும் வகையிலும்  தமிழகத்திலும் நீரா பானத்தை இறக்கவும், விற்பனை செய்யவும் தமிழக அரசு அனுமதி அளித்தது.
அதைத்தொடர்ந்து மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரியத்திடம் பதிவு செய்து தென்னை உற்பத்தியாளர்கள் நீரா பானத்தை உற்பத்தி செய்கிறார்கள்.  அதன்படி தற்போது, கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் நீரா பானம் உற்பத்தி செய்யப்படுகிறது. அங்கு உற்பத்தி செய்யப்படும் நீரா பானங்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டை நீதிமன்றம் எதிரே நீரா பானம் விற்பனை செய்யப்படுகிறது.  200 மி.லி. நீரா பானம் ரூ.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  பதநீரைப் போன்ற சுவையுடன் இருக்கும் நீரா பானத்தை குழந்தைகள் முதல்  பெரியவர்கள் வரை அருந்திச் செல்கிறார்கள். 
இது தொடர்பாக நீரா பானம் விற்பனை செய்து வரும் கேடிசி நகரைச் சேர்ந்த சுடலைக்கண்ணு கூறியதாவது: 
200 மி.லி. நீரா பானம் 5 இளநீருக்குச் சமம்.  திருநெல்வேலி மாவட்டத்தில் நீரா பானம் உற்பத்தி செய்யப்படவில்லை.  அதனால் பொள்ளாச்சியில் இருந்து திருநெல்வேலிக்கு நீரா பானம் அனுப்பப்படுகிறது. 
25 லிட்டர், 30 லிட்டர் என்ற அளவிலும், சில நேரங்களில் 40 லிட்டர் நீரா பானத்தையும் திருநெல்வேலிக்கு அனுப்பி வைக்கிறார்கள். 
அதை நாங்கள் விற்பனை செய்து வருகிறோம்.  தினமும் காலையில் 7.30 மணிக்கு விற்பனையை தொடங்குகிறோம்.  நீரா பானத்துக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்திருப்பதால், விரைவாக விற்றுத்தீர்ந்து விடுகிறது.  நீரா பானத்தில் எதையும் கலக்க முடியாது. ஒரு சொட்டு தண்ணீர் கலந்தால்கூட அது கெட்டுப்போய்விடும். இப்போது 200 மி.லி. நீரா பானம் ரூ.30-க்கும், 500 மி.லி. அளவுள்ள நீரா பானம் பாட்டில் ரூ.80-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 
நீரா பானம் ஆரோக்கியமான பானமாகும். குடித்த உடனேயே உடலுக்கு ஆற்றலைத் தர வல்லது.  இதில் ஆல்கஹால் எதுவும் இல்லை. மிகவும் சத்தான பானமாக கருதப்படும் நீரா பானத்தைக் குடிப்பதால், உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிக்காது.  அதனால் சர்க்கரை நோயாளிகளும் பயப்பட தேவையில்லை. 
நீரா பானம் உடலின் வெப்பத்தை தணிப்பதோடு, வயிற்றுப் புண்ணையும் ஆற்றும் சக்தி படைத்தது.  இதேபோல் மூல நோயைக் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது.  பசியெடுக்காத குழந்தைகளுக்கு நீரா பானத்தைக் கொடுத்தால், அது பசியைத் தூண்டும். ஒரு டம்ளர் நீராபானத்தில் சோடியம், கால்சியம், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் பி 1, பி -6 மெக்னீசியம், நீர்சத்துக்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன.  இந்த நீராபானம் ஈரல் பாதிப்பு நோய்களை தடுக்கிறது.  செரிமான மண்டலத்தை பாதுகாக்கிறது. சிறுநீர் சம்பந்தமான எல்லா பிரச்னைகளுக்கும் ஏற்ற பானமாக இருக்கிறது. 
உடல் வெப்பம் சம்பந்தமான நோய்களை தீர்க்கிறது. தோல் சுருக்கத்தை தடுக்கிறது. உடலுக்கு தேவையான நீர் சத்துக்கள் அடங்கியிருக்கிறது. காலையில் வெறும் வயிற்றில் அருந்தும்போது இதன் முழுமையான மருத்துவ பயன்களை பெற முடியும். திருநெல்வேலியில் மேலும் சில இடங்களில் நீரா பானத்தை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.  அதற்கான இடமும் இறுதி செய்யப்பட்டுள்ளது.  விரைவில் மேலும் சில இடங்களில் நீரா விற்பனை தொடங்கப்படும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com