பணகுடி பேரூராட்சியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு : 10 நாள்களாக மக்கள் அவதி

பணகுடி பேரூராட்சியில் 10 நாள்களாக குடிநீர் கிடைக்காமல் கடும் அவதிக்குள்ளாகியுள்ள மக்கள், டேங்கர் லாரி மூலம் குடிநீர் விநியோகிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.


பணகுடி பேரூராட்சியில் 10 நாள்களாக குடிநீர் கிடைக்காமல் கடும் அவதிக்குள்ளாகியுள்ள மக்கள், டேங்கர் லாரி மூலம் குடிநீர் விநியோகிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
பணகுடி பேரூராட்சிக்கு தாமிரவருணி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் கீழ் தினமும் 14 லட்சம் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யவேண்டும். ஆனால்  சராசரியாக 8 லட்சம் லிட்டர் குடிநீர் கூடவிநியோகம்  செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.  இதுதவிர வீரபாண்டி, முந்திரி தோப்பு, சூறாவளிபத்து, வாழைதோப்பு ஆகிய உள்ளூர் நீராதாரங்களில் உள்ள உறைகிணறுகளில்  தண்ணீர் இல்லாத நிலை காணப்படுகிறது. இதனால் பணகுடி பேரூராட்சிப் பகுதியில் குடிநீர் விநியோகம் பாதிப்படைந்துள்ளது. கடந்த 10 நாள்களாக பேரூராட்சி நிர்வாகத்தினர் குடிநீர் விநியோகத்தை நிறுத்தியுள்ளனர். இதனால் பொதுமக்கள் குடிதண்ணீருக்காக அலைந்து திரியும் நிலை ஏற்பட்டுள்ளது.
சுமை ஆட்டோக்களில் குடிதண்ணீர் வியாபாரம் நடைபெற்று வருகிறது. ஒரு குடம் தண்ணீர் ரூ.3 முதல் ரூ.5 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. பணகுடியில் உள்ள ஓடு, செங்கல் உற்பத்தி தொழில் கூடங்களில் தண்ணீர் இல்லாமல் உற்பத்தி பாதிப்படைந்துள்ளது. திருமண மண்டபங்கள், மருத்துவமனைகள், வியாபார நிறுவனங்களிலும் குடிதண்ணீர் பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இதுதொடர்பாக பணகுடி பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவரும் ம.தி.மு.க. நகரச் செயலருமான மு.சங்கர் கூறியது:
பணகுடி பேரூராட்சி தொழில் நகரமாகும். ஓடு, செங்கல் உற்பத்தி தொழில் கூடங்கள் நிறைந்துள்ளன. இதனால் தொழிலாளர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் அதிக அளவில் உள்ளனர். சராசரியாக தினமும் இப்பேரூராட்சிக்கு 25 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவையாக உள்ளது. 
தற்போது நிலவும் வறட்சியால் உள்ளூர் நீராதாரங்களில் இருந்து குடிதண்ணீர் விநியோகத்துக்கு தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. தாமிரவருணி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் மூலமாகவும்  வழக்கமான குடிதண்ணீர் விநியோகம் செய்யப்படவில்லை. எனவே பொதுமக்கள் நலன் கருதி பணகுடி பேரூராட்சி நிர்வாகம் டேங்கர் லாரி மூலம் குடிதண்ணீர் விநியோகம் செய்யவேண்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com