பாறைகளால்  சவாலாக மாறிய தாமிரவருணி ரயில்வே பாலப் பணி!: வெடிகளை பயன்படுத்த தடையால் சிக்கல்

இரட்டை ரயில் பாதை திட்டத்தின் கீழ் திருநெல்வேலியில் தாமிரவருணி ஆற்றின் குறுக்கே குருந்துடையார்புரம் முதல் மீனாட்சிபுரம் வரை புதிய பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.



இரட்டை ரயில் பாதை திட்டத்தின் கீழ் திருநெல்வேலியில் தாமிரவருணி ஆற்றின் குறுக்கே குருந்துடையார்புரம் முதல் மீனாட்சிபுரம் வரை புதிய பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏற்கெனவே உள்ள பாலத்தின் அருகே புதிய பாலம் உருவாகுவதால் பாறைகளை வெடிகளை பயன்படுத்தி தகர்க்க முடியாமல் கட்டுமான பணியாளர்கள் சவாலை எதிர்கொண்டு வருகிறார்கள்.
தெற்கு ரயில்வே நிர்வாகத்துக்கு வருவாயை அள்ளித்தரும் வழித்தடமாக சென்னை-கன்னியாகுமரி வழித்தடம் அமைந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக முன்பதிவு பெட்டிகளில் ஒரு காலியிடம் கூட இல்லாமல் ஆண்டின் அனைத்து நாள்களும் இந்த வழித்தடத்தில் விரைவு ரயில்கள் இயங்கி வருகின்றன. இவ் வழித்தடத்தில் நாகர்கோவில், திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட முக்கிய நகரங்கள் உள்ளன. இந்த வழித்தடத்தில் இரட்டை வழிப்பாதையை விரைந்து முடிக்க தமிழக மக்கள் கடந்த 15 ஆண்டுகளாக போராடி வருகிறார்கள். இருப்பினும் அதற்கான பணிகள் ஆமை வேகத்திலேயே நடைபெற்று வருகின்றன. 
ரூ. 1700 கோடி திட்டம்: 2012-13 ஆம் ஆண்டில் ரயில்வே நிதிநிலை அறிக்கையில் கன்னியாகுமரி முதல் மதுரை வரையிலான 246 கி.மீ. தொலைவுக்கு இருவழிப்பாதை அமைக்க ஆய்வு நடத்த அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி ஆய்வு முடிந்து திட்ட மதிப்பீடு தயார் செய்து ரயில்வே வாரியத்திடம் அளிக்கப்பட்டது. அடுத்தடுத்த ரயில்வே நிதிநிலை அறிக்கையில், மதுரை-கன்னியாகுமரி இரட்டை ரயில்பாதை பணிகள் குறித்த சில முன்னேற்றத்திற்குரிய அறிவிப்பு வெளியானது. அதன்படி இதற்கான திட்டத்தை மதுரை-மணியாச்சி-நாகர்கோவில், மணியாச்சி-தூத்துக்குடி, கன்னியாகுமரி-திருவனந்தபுரம் என மூன்று பிரிவுகளாகப் பிரித்தனர்.  முதல் கட்டமாக மணியாச்சி-தூத்துக்குடி வரையிலான இரட்டை ரயில்பாதையை முடிக்கவும், அதற்காக ரூ.800 கோடி நிதி தேவைப்படும் எனவும் கணக்கிடப்பட்டது.
மதுரை-நாகர்கோவில் வரை பாதை அமைக்க ரூ.1,700 கோடியும், கன்னியாகுமரி-திருவனந்தபுரம் பாதைக்கு ரூ.900 கோடியும் செலவாகும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக மதுரை முதல் திருநெல்வேலி வரை முதலில் கணக்கிடும் பணிகள் முடிந்த நிலையில், திருநெல்வேலி-நாகர்கோவில் இடையேயான 74 கி.மீ. தொலைவு ரயில்பாதையில் இரண்டாம் கட்டமாக ஆய்வு செய்யப்பட்டது. 
தண்டவாளத்தின் அளவு,  காலியாக உள்ள ரயில்வே இடங்கள், தண்டவாள வரைபடம் ஆகியவற்றை அதிநவீன கருவிகள் மூலம் கணக்கெடுத்து வருகிறார்கள். இரட்டை வழிப்பாதைக்கு ஆக்கிரமிப்பு தொந்தரவுகள் வராமல் தடுக்கும் வகையில் இந்த ஆய்வுப்பணியின்போதே அடையாளத் தூண்கள் பதிக்கப்பட்டுள்ளன.  கடந்த இரு நிதியாண்டுகளில் மத்திய அரசு ஒதுக்கிய நிதியைக் கொண்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. 
நெல்லையில் புதிய பாலம்: கங்கைகொண்டான், மணியாச்சி பகுதிகளில் தண்டவாளத்தின் அருகே புதிய தண்டவாளம் அமைக்கும் பணிகளுக்கான முன்னேற்பாடுகள் தொடங்கியுள்ளன. 
திருநெல்வேலியில் இரட்டை ரயில்வே பாதை திட்டத்தின் ஒரு பகுதியாக தாமிரவருணி ஆற்றின் குறுக்கே புதிய மேம்பாலம் கட்டப்படுகிறது. குருந்துடையார்புரம் முதல் மீனாட்சிபுரம் வரை ஏற்கெனவே உள்ள ரயில்வே பாலத்தை விரிவாக்கம் செய்ய இயலாத நிலையில் புதிய பாலம் அமைக்கப்படுகிறது. இதற்காக அஸ்திவார பணிகள் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகின்றன. இங்கு 16 தூண்கள் அமைத்து பாலத்தை அமைக்க முடிவு செய்யப்பட்டது. ரயில்களின் வேகம், சரக்கு ரயில்களின் எடை உள்ளிட்டவற்றை தாங்கும் வகையில் பாலத்தை உருவாக்கும் கட்டாயம் ஏற்பட்டுள்ளதால், ஒவ்வொரு பணியும் கடுமையான ஆய்வுகளுக்குப் பின்பு முடிக்கப்பட்டு வருகிறது.
பாறைகளால் சவால்: இதுகுறித்து ரயில்வே வட்டாரங்கள் கூறியது: இரட்டை ரயில் பாதை திட்டத்தில் மணியாச்சி-நாகர்கோவில் திட்ட மதிப்பீட்டின் கீழ் இந்தப் பாலப்பணி வருகிறது. தாமிரவருணி நதியின் குறுக்கே நூற்றாண்டுகளைக் கடந்து நிற்கும் பாலங்களைக் கட்டுவது சவாலானதாகும். ஏற்கெனவே அருகேயுள்ள பாலம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புதான் அலக ரயில் பாதையாக மாற்றப்பட்டது. அப்போது புதிய தூண்கள் அமைக்கப்படாமல் இரும்புத் தூண்களின் புதிய தொழில்நுட்பங்களைக் கொண்டு விரைவாக முடிக்கப்பட்டது. ஆனால், இப்போது புதிய பாலம் தூண்கள் அமைத்து போடுவதால் பல்வேறு சவால்கள் ஏற்பட்டுள்ளன.
ஏற்கெனவே உள்ள பாலத்தில் இருந்து சுமார் 4 மீட்டர் தொலைவில் புதிய பாலம் அமைக்கப்படுகிறது. ஆகவே, ஆற்றில் உள்ள பாறைகளை வெடிவைத்து தகர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சிறிய ரக டில்லர், போர் போடும் இயந்திரங்களைக் கொண்டு பாறைகளை உடைக்கும் பணிகள் இப்போது நடைபெற்று வருகிறது. அதனால் ஒரு மனித சக்தியில் முடிய வேண்டிய பணிகளுக்கு அதிகபட்சமாக 8 மனிதசக்தி தேவைப்படுகிறது. இதனால்பணிகள் நிறைவடைவதில் காலதாமதம் ஏற்படும் நிலை உள்ளது. 
இதுகுறித்து உயரதிகாரிகளுக்கு ஏற்கெனவே தகவல் தெரிவித்துள்ளோம். இருப்பினும் சவால்களை எதிர்கொண்டு இன்னும் 6  மாதங்களில் பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளோம். பருவமழை தொடங்கி வெள்ளம் வந்தால் பணிகள் மேலும் பாதிக்கும். ஆகவே, மழைக்கு முன்பாக 60 சதவிகித பணிகளை நிறைவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. 
இந்தப் பாலப்பணி நிறைவடைந்தால் குருந்துடையார்புரம் முதல் நாகர்கோவில் வரையிலான இரட்டை ரயில்வே தண்டவாளப் பணிகளைத் தொடங்கி விரைவாக முடிக்கப்படும் என்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com