ஆலங்குளம் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு: காலாவதியான உணவுப் பொருள்கள் அழிப்பு
By DIN | Published On : 15th May 2019 09:14 AM | Last Updated : 15th May 2019 09:14 AM | அ+அ அ- |

ஆலங்குளத்தில் உணவுப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகளில் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ரூ. 20 ஆயிரம் மதிப்புள்ள காலாவதியான உணவுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.
சங்கரன்கோவில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் நளினி, மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் ஜெகதீஷ் சந்திரபோஸ் ஆகியோரின் ஆலோசனையின்பேரில், பேரூராட்சி செயல் அலுவலர் பெத்துராஜ், உணவுப் பொருள் பாதுகாப்பு அலுவலர் ரவி ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் ஆலங்குளம் பழைய, புதிய பேருந்து நிலையங்கள் மற்றும் சுற்றுப் பகுதியில் உள்ள உணவுப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, கடைகளில் தயாரிப்பு தேதி குறிப்பிடாத, காலாவதியான தின்பண்டங்கள், உணவுப் பொருள்கள், திறந்தவெளியில் ஈக்கள் மொய்க்கக்கூடிய வகையில் வைக்கப்பட்டிருந்த தின்பண்டங்கள், அழுகிப்போன மாம்பழங்கள், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் உள்ளிட்ட ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. மேலும், பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழித்தல் குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.