ராதாபுரம் ஐடிஐயில் மாணவர் சேர்க்கை
By DIN | Published On : 15th May 2019 09:22 AM | Last Updated : 15th May 2019 09:22 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
இதுதொடர்பாக ராதாபுரம் அரசு தொழிற் பயிற்சி நிலைய முதல்வர் லெட்சுமணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ராதாபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. பத்தாம் வகுப்பு முடித்துள்ள மாணவர்கள் ஐடிஐயில் சேர www.skilltraining.tn.govt.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது பயிற்சி நிலையத்திற்கு நேரில் வந்தால் இலவசமாக ஆன்லைனில் விண்ணப்பித்து தரப்படும்.
விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் -2, பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், சாதிச் சான்றிதழ், ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல் கொண்டு வர வேண்டும். விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள் மே 31. ராதாபுரத்தில் இயங்கி வரும் அரசு ஐடிஐயில் ஃபிட்டர், எலக்ட்ரீஷியன், மெக்கானிக் மோட்டார் வண்டி, ஏசி மெக்கானிக், வெல்டர் ஆகிய தொழிற்பிரிவுகளில் நவீன இயந்திரங்கள், கருவிகள் மற்றும் நன்கு அனுபவமுள்ள திறமையான பயிற்றுநர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அகில இந்திய பாடத்திட்டத்தின்படி பயிற்சி அளிப்பதுடன், படித்து முடித்தவுடன் மத்திய அரசின் என்சிவிடி சான்றிதழ் வழங்கப்படும். நல்ல ஊதியத்துடன் உறுதியான வேலைவாய்ப்பையும் பெறலாம்.
அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் மாதந்தோறும் ரூ.500 ஊக்கத்தொகை வழங்கப்படுவதுடன், லேப்டாப், சைக்கிள், காலணி, சீருடை, வரைபடக் கருவிகள், பாடப் புத்தகங்கள் ஆகியவை இலவசமாக வழங்கப்படுகிறது. பயிற்சி நிலையத்திற்கு வந்து செல்ல இலவச பயண அட்டை வழங்கப்படுகிறது.