300-க்கும் மேற்பட்ட தொகுதிகளை பாஜக கூட்டணி கைப்பற்றும்: சிஏஐடி நம்பிக்கை

மக்களவைத் தேர்தலில் 300-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என அகில இந்திய

மக்களவைத் தேர்தலில் 300-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என அகில இந்திய வணிகர்கள் கூட்டமைப்பு (சிஏஐடி) நம்பிக்கை தெரிவித்துள்ளது. 
இதுகுறித்து சிஏஐடி தலைவர் பி.சி. பார்தியா, பொதுச் செயலாளர் பிரவீண் கண்டெல்வால் புதன்கிழமை கூறியதாவது: 
6 கட்ட மக்களவைத் தேர்தல் முடித்துள்ள நிலையில், நாடு முழுவதும் உள்ள வணிகர்கள், பொதுமக்களிடம் அண்மையில் கருத்துகளைக் கேட்டறிந்தோம். அதன்படி பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 300-க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. பாஜக 300 இடங்களையும், அதன் கூட்டணிக் கட்சிகள் 40 முதல் 50 இடங்களையும் பெறும். 
உத்தர பிரதேசத்தில் 50 முதல் 60 தொகுதிகள், மகாராஷ்டிரத்தில் 22-25, மேற்கு வங்கத்தில் 15, அஸ்ஸாமில் 10, மத்திய பிரதேசத்தில் 23, ராஜஸ்தானில் 22, குஜராத்தில் 23, ஹரியாணாவில் 8, தில்லியில் 7,  பிகாரில் 15, வட கிழக்கு மாநிலங்களில் 7, சத்தீஸ்கரில் 7, ஒடிஸாவில் 14, ஜார்க்கண்டில் 10, தமிழ்நாட்டில் 4, கர்நாடகத்தில் 20, ஜம்மு-காஷ்மீரில் 3, ஹிமாசல பிரதேசத்தில் 3, கேரளத்தில் 3,  கோவாவில் 2, உத்தரக்கண்டில் 3 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும். 
தில்லியில் வணிகர்கள் மத்தியில் பிரதமர் மோடி கடந்த மாதம் மேற்கொண்ட பிரசாரத்தால், வணிகர்கள் பாஜகவுக்கு ஆதரவளித்துள்ளனர். 
காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், எந்தவித தேசிய பிரச்னையையும் தேர்தல் பிரசாரத்தின்போது எழுப்பவில்லை. பிரதமர் மோடியை தனிப்பட்ட முறையில் அவதூறாக விமர்சித்து வருகின்றனர். 
வரி செலுத்துவோர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது கடும் கோபத்தில் உள்ளனர். எதிர்க்கட்சிகளிடம் ஒற்றுமை இல்லை. இது வலுவான பாஜக கூட்டணிக்கு சாதகமாக அமையும். கொல்கத்தாவில் பாஜக பேரணியில் நிகழ்ந்த வன்முறை திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் மத்தியில் அவப் பெயரை ஏற்படுத்தியுள்ளது. இது அங்கு பாஜகவுக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தும். 
நாட்டில் பல்வேறு இடங்களில் பாஜக வேட்பாளர்கள் மீது மக்கள் கோபத்தில் உள்ளனர். இருப்பினும், பிரதமர் மோடியின் தொடர் பிரசாரம் காரணமாக மக்கள் மோடிக்கு வாக்களிப்பதாகக் கூறுகின்றனர். இது பாஜகவுக்கு பெரும் ஆதரவைப் பெற்றுத் தரும்  என்றனர் அவர்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com