தொழில்நுட்பக் கோளாறு: மெட்ரோ ரயில் சேவையில் தாமதம்
By DIN | Published On : 16th May 2019 06:41 AM | Last Updated : 16th May 2019 06:41 AM | அ+அ அ- |

தில்லி மெட்ரோவின் பல்வேறு வழித்தடங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக புதன்கிழமை ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டது.
இதுகுறித்து தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் (டிஎம்ஆர்சி) அதிகாரி புதன்கிழமை கூறியதாவது:
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, தீஸ் ஹசாரி - சாஸ்திரி பார்க் மெட்ரோ பிரிவு, ரெட்லைன் வழித்தடத்தில் பீதம்புரா- கேசவ்புரம் பிரிவுகளில் ரயில்கள் மெதுவாக இயக்கப்பட்டன.
அதேபோன்று, பசுமை வழித்தடத்தில் கேவ்ரா முதல் இந்தர்லோக் வரையிலும், கீர்த்தி நகர் வரையிலும் ரயில்கள் தாமதாக இயக்கப்பட்டன. மேலும், அசோக் பார்க் மெயின் முதல் கீர்த்தி நகர் வரையிலும் இதே பிரச்னை இருந்தது. எனினும், பின்னர் ரயில் சேவை இயல்பு நிலைக்கு திரும்பியது.
ரெட்லைன் வழித்தடத்தில் ஷஹீத் ஸ்தல் மற்றும் ரிதாலா இடையே ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டது. அதேபோன்று, நொய்டா எலெக்ட்ரானிக் சிட்டி மற்றும் அக்ஷர்தாம் பகுதியிலும் ரயில் சேவையில் மாலையில் தாமதம் ஏற்பட்டது என்றார் அந்த அதிகாரி.
மெட்ரோ ரயில் முன் குதித்த பயணி மீட்பு: இதற்கிடையே, தில்லி மெட்ரோ புளூலைன் வழித்தடத்தில் மெட்ரோ ரயில் முன் குதித்த பயணி மீட்கப்பட்டார். இதனால், அந்த வழித்தடத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உயரதிகாரி புதன்கிழமை கூறியதாவது: யமுனா பேங்க் - வைஷாலி பிரிவில் உள்ள காஜியாபாதில் கௌஷாம்பி மெட்ரோ ரயில் நிலையம் உள்ளது. அதில் துவாரகா நோக்கிச் செல்லும் ரயில் நிலையத்துக்குள்ளாக வந்துகொண்டிருந்தபோது ஆண் பயணி ஒருவர் தண்டவாளத்தில் குதித்தார். அசம்பாவிதம் நிகழும் முன்பாக அவர் மீட்கப்பட்டார்.
இதனால், புளூலைன் வழித்தடத்தில் காலை 9.56 மணி முதல் காலை 10.03 மணி வரை மெட்ரோ ரயில் சேவைகள் சிறிது நேரம் பாதிக்கப்பட்டன. பின்னர் வழக்கம் போல
ரயில் சேவை இயல்பு நிலைக்கு வந்தது. தண்டவாளத்தில் குதித்தவர் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என அந்த அதிகாரி தெரிவித்தார்.