நெல்லையில் பகலில் சுட்டெரித்த வெயில்; மாலையில் குளிர்வித்த மழை
By DIN | Published On : 16th May 2019 09:34 AM | Last Updated : 16th May 2019 09:34 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாநகரில் பகலில் வெயில் சுட்டெரித்த நிலையில், மாலையில் பெய்த மழை குளிர்வித்தது.
திருநெல்வேலி மாநகரில் கடந்த ஒரு மாதத்துக்கும் தொடர்ச்சியாக வெயில் கொளுத்தி வருகிறது. மேலும் கடந்த 20 நாள்களுக்கும் மேலாக சராசரியாக 103 முதல் 105 பாரன்ஹீட் டிகிரி வரை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. வழக்கம்போல் புதன்கிழமையும் காலை முதலே வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது.
இந்த நிலையில் மாலையில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து காற்றுடன் மழை கொட்டியது. திருநெல்வேலி நகரம், திருநெல்வேலி சந்திப்பு, வண்ணார்பேட்டை, பாளையங்கோட்டை, தியாகராஜநகர், மேலப்பாளையம், மகாராஜநகர், சமாதானபுரம் என மாநகரின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்தது. சுமார் 10 நிமிடங்கள் மட்டுமே மழை பெய்தபோதிலும், திருநெல்வேலி சந்திப்பு, திருநெல்வேலி நகரம் காட்சி மண்டபம் உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் தேங்கியது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பாளையங்கோட்டை தியாகராஜநகரில் பூட்டிக்கிடந்த வீட்டில் தென்னை மரத்தின் மீது இடி தாக்கியதில், அந்த மரம் பற்றி எரிந்தது. இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு பாளையங்கோட்டை தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சென்று தீயை அணைத்தனர்.
மேலப்பாளையத்தை அடுத்த கருங்குளத்தில் திடீரென முள்புதர்கள் தீப்பிடித்து எரிந்தன. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று தீயை அணைத்தனர். இடி தாக்கியதால் முள்புதர் தீப்பிடித்ததா அல்லது யாராவது தீயை வைத்துச் சென்றனரா என்பது தெரியவில்லை.
திருநெல்வேலியை அடுத்த பேட்டை, சுத்தமல்லி, கொண்டாநகரம், கல்லூர் உள்ளிட்ட இடங்களிலும் காற்றுடன் மழை பெய்தது. இதனால் அப்பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.