பாசிசத்தையும், பாஜகவையும் பிரிக்க முடியாது: காங்கிரஸ் தாக்கு

பாசிசத்தையும், பாஜகவையும் பிரிக்க முடியாது என்று காங்கிரஸ் கட்சி கடுமையாகக் குற்றம்சாட்டியுள்ளது. 

பாசிசத்தையும், பாஜகவையும் பிரிக்க முடியாது என்று காங்கிரஸ் கட்சி கடுமையாகக் குற்றம்சாட்டியுள்ளது. 
இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கட்சியின் தில்லி அலுவலகத்தில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: 
பாஜக ஆட்சியில் கடந்த ஆண்டு முதல் கும்பல் வன்முறைக் கலாசாரம் திட்டமிட்டு ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. நாட்டில் கலாசார அடையாளத்தின் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடியும், பாஜக தலைவர் அமித் ஷாவுமே முழு பொறுப்பாளிகள். 
கூட்டாட்சி முறை, பிராந்திய மரியாதை, கலாசாரம், உணவுப் பழக்கம், பாரம்பரியமாக வசித்து வருவோரின் அடையாளம் உள்ளிட்டவை ஒவ்வொரு மாநிலத்திலும் பாஜகவால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றன. அரசியல் சூழலைச் சீர்குலைத்து, நாடு முழுவதும் ஒற்றை கலசாரத்தைப் புகுத்துவதற்கு பாஜக முயற்சி செய்கிறது. மாநிலத்தின் கலாசார அடையாளங்களை அழிக்க அதிகாரப் பசியுடன் இருக்கும் மோடி- அமித் ஷா இருவர் சார்ந்த பாஜகவின் ரத்தத்தில் ஃபெடரல் பாசிசம் உள்ளது. 
கொல்கத்தாவில் சமூக சீர்த்திருத்தவாதியான ஈஷ்வர் சந்திர வித்யாசாகரின் சிலை தாக்கப்பட்டது கண்டனத்துக்குரியது.  இதுபோன்ற வெட்கக் கேடான சம்பவத்தால் அனைவரும் கவலையுற்றுள்ளோம். இதனால்தான், நாட்டின் அனைத்துப் பகுதிகளும் காங்கிரஸ் கட்சி என்ற ஒரே குடையின் கீழ் இருக்கும் உணர்வை உருவாக்கவே ராகுல் காந்தி, வட இந்தியாவில் உள்ள அமேதியிலும், தென்னிந்தியாவிலுள்ள வயநாட்டிலும் போட்டியிடுகிறார். 
தேசத் தலைவர்களை அவமதிப்பது, தலைப்பீடத்தின் தத்துவத்தை திணிப்பது ஆகியவையே பாஜகவின் எண்ணமாக உள்ளது. சென்னையில் உள்ள பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என பாஜகவின் ஹெச். ராஜா கூறியதே இதற்கு உதாரணம். மேலும், அக்கட்சியின் பொதுச் செயலாளர் ராம் மாதவ், இதுபோன்று சிலைகளை தகர்ப்பதைக் கண்டிக்காமல், ஊக்கப்படுத்தும் வகையில் பேசியதற்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் இல்லை. 
சென்னையில் கடந்த பிப்ரவரி மாதம் அம்பேத்கர் சிலை அவமதிக்கப்பட்டதையும், காந்தியைச் சுட்டுக் கொன்றது போன்ற மாதிரி சம்பவத்தை சங் பரிவாரைச் சேர்ந்தவர்கள் அரங்கேற்றியதையும், காந்தியை கொலை செய்த நாதுராம் கோட்சேவுக்கு மாலை அணிவித்ததையும் உதாரணங்களாகக் குறிப்பிட முடியும். 
ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்காதது, கோவா, மேகாலயா, அருணாசல பிரதேசம், உத்தரக்கண்ட், மணிப்பூர் போன்ற மாநிலங்களில் ஆட்சி அமைத்த விதம் ஆகியவற்றை மோடி தலைமையிலான மோசமான அரசியலுக்கு உதாரணங்களாகச் சொல்லலாம். பிரிவினை அரசியலை முன்னெடுப்பதில் மோடி அரசு முனைப்புடன் செயல்படுகிறது. குடிமக்கள் சட்டத் திருத்த மசோதாவை கொண்டு வர முனைவது, வடகிழக்கு மாநில தொல் குடிமக்களின் மீது நடத்தப்பட்ட நேரடித் தாக்குதலாகும். 
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு ரூ. 80 ஆயிரம் கோடி அளிப்பதாகக் கூறி வெறும் 31 சதவீதம் மட்டுமே மத்திய அரசு அளித்துள்ளது. 
இதுபோன்று மாநிலங்களுக்குரிய நிதியை முறைப்படி மத்திய அரசு ஒதுக்குவதில்லை. இதனால், மாநில அரசுகள் செயல்படுத்தும் கல்வி, சுகாதாரம் சார்ந்த திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்றார் அபிஷேக் சிங்வி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com