முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
வடக்கு அரியநாயகிபுரத்தில் பழுதடைந்த சாலையால் தொடரும் விபத்துகள்!
By DIN | Published On : 18th May 2019 04:49 AM | Last Updated : 18th May 2019 04:49 AM | அ+அ அ- |

முக்கூடல் அருகே உள்ள வடக்கு அரியநாயகிபுரத்தில் பழுதடைந்த சாலையால் தொடர்ச்சியாக விபத்து ஏற்படுவதாகவும், உடனடியாக சாலையைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முக்கூடல் அருகே வடக்கு அரியநாயகிபுரம் தாமிரவருணி ஆற்றில் உள்ள அணைக்கட்டுப் பகுதியில் இருந்து கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் திருநெல்வேலி மாநகரப் பகுதிக்கு குடிநீர் கொண்டு வரப்படுகிறது. இதற்காக அரியநாயகிபுரம் பகுதியில் இருந்து திருநெல்வேலி காட்சிமண்டபம் வரை குழாய் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துவிட்டன.
ஆனால் வடக்கு அரியநாயகிபுரத்தில் குழாய் பதிக்கும் பணிக்காக தோண்டப்பட்ட சாலையில் சுமார் 100 மீ. அளவுக்கு இதுவரை சாலை சீரமைக்கப்படவில்லை. இதனால் சாலை குண்டும், குழியுமாகக் காணப்படுகிறது. இதனால் இச்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்கும் நிலை உள்ளது.
இந்தச் சாலையைச் சீரமைக்குமாறு அரசு அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இது தொடர்பாக வடக்கு அரியநாயகிபுரத்தைச் சேர்ந்த மணி கூறியதாவது: கடந்த 6 மாதங்களாக இந்தச் சாலை முற்றிலுமாக பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இந்தச் சாலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த வாகனங்கள் பள்ளங்களில் சிக்கித் திணறுகின்றன. சில நேரங்களில் பழுதும் ஆகிவிடுகின்றன. இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் அடிக்கடி, மேடு, பள்ளம் தெரியாமல் கீழே விழுந்து காயமடைகின்றனர்.
இந்தச் சாலையைச் சீரமைக்க பலமுறை அரசு அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என்றார்.
இதுதொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த சிலர் கூறியதாவது:
"கடந்த 6 மாதங்களாக இந்தச் சாலையைச் சீரமைக்காமல் அரசு அதிகாரிகள் எங்களை ஏமாற்றி வருகிறார்கள். இந்தச் சாலை பிரச்னைக்கு தீர்வு காணாவிட்டால், ஊர் மக்களை திரட்டி மறியலில் ஈடுபடுவோம்' என்றனர்.