முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
வறண்டது கருப்பாநதி அணை: குடிநீர்ப் பிரச்னை ஏற்படும் அபாயம்
By DIN | Published On : 18th May 2019 04:55 AM | Last Updated : 18th May 2019 04:55 AM | அ+அ அ- |

கடையநல்லூர் அருகேயுள்ள கருப்பாநதி அணை வறண்ட நிலையில், பல்வேறு பகுதிகளிலும் குடிநீர்ப் பிரச்னை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடையநல்லூர் நகராட்சியின் மொத்த பரப்பு 52.25 சதுர கிலோ மீட்டர். தற்போதைய நிலையில் இங்குள்ள மக்கள் தொகை 90,100 ஆகும். 13,950 குடிநீர் இணைப்புகள் உள்ளன.
1973 முதல் கருப்பாநதி அணைக்கட்டு திட்டத்தின் மூலம் 35 லட்சம் லிட்டர் குடிநீர் தினமும் கடையநல்லூர் நகரப் பகுதியில் விநியோகிக்கப்பட்டு வந்த நிலையில், 2003ஆம் ஆண்டு தாமிரவருணி கூட்டுக் குடிநீர்த் திட்டம் கடையநல்லூரில் செயல்பாட்டிற்கு வந்தது. இவ்விரண்டு திட்டங்களின் மூலம் நாளொன்றுக்கு சுமார் 68 லட்சம் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்பட வேண்டும்.
இதற்கிடையே மழை பொய்த்து விட்ட நிலையில், கடையநல்லூர் வட்டாரப் பகுதிகளில் கடும் வெயில் சுட்டெரித்து வருகிறது. மேலும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியிலும் கடந்த சில மாதங்களாக மழை இல்லை. இதனால் கருப்பாநதி அணைக்கு வரும் நீர்வரத்து முற்றிலும் நின்று விட்டது. இதன் காரணமாக அணை வறண்டு பாளம், பாளமாக வெடித்து காணப்படுகிறது.
இந்த சூழலில் கருப்பாநதி அணையிலிருந்து தண்ணீர் பெறும் பகுதிகளுக்கு தண்ணீர் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டுவிட்டது.
இதன் காரணமாக கடையநல்லூர், சொக்கம்பட்டி, திரிகூடபுரம், முத்துசாமியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர்ப் பற்றாக்குறை உருவாகியுள்ளது. கடையநல்லூர் நகராட்சியைப் பொறுத்தவரை தாமிரவருணி திட்டம் மூலம் கிடைக்கும் குடிநீர் மற்றும் நகராட்சி மூலம் கல்லாற்றுப் பகுதியில் வெட்டப்பட்டுள்ள கிணறுகள் மூலம் குடிநீர் பெறப்பட்டு குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இருப்பினும், மழை பொய்த்து விட்டால் கடையநல்லூரில் கடும் குடிநீர்ப் பிரச்னை ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. சொக்கம்பட்டி, திரிகூடபுரம் பகுதிகளைப் பொறுத்த வரை தாமிரவருணி மற்றும் உள்ளூர் குடிநீர் ஆதாரங்களைக் கொண்டு தற்போது குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கருப்பாநதி அணைப்பகுதியில் மழை பொய்த்து விட்டால் வரும் கோடையில் கடையநல்லூர் வட்டாரப் பகுதிகள் குடிநீர் பிரச்னையை எதிர்கொள்ளும் சூழ்நிலை உருவாகும் என நகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.