கால்நடை மருத்துவக் கல்லூரியில் கிரிக்கெட் போட்டி: நெல்லை அணி இரண்டாமிடம்
By DIN | Published On : 20th May 2019 07:06 AM | Last Updated : 20th May 2019 07:06 AM | அ+அ அ- |

திருநெல்வேலியில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி அணி இரண்டாமிடம் பிடித்தது.
தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக கல்லூரிகளின் ஆசிரியர்களுக்கிடையே பல்கலைக்கழக முதன்மை கிரிக்கெட் போட்டி- 2019 திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் கடந்த 16 ஆம் தேதி முதல் நடைபெற்று வந்தது. போட்டியை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக மேலாண்மைக் குழு உறுப்பினர் எம். சுந்தரலிங்கம், மருத்துவ மேலாண்மைக் குழு உறுப்பினர் ரேமண்ட் பேட்ரிக் ஆகியோர் தொடங்கிவைத்தனர். திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் (பொ) ஜே.ஜாண்சன் ராஜேஸ்வர் தலைமை வகித்தார்.
இப்போட்டியில் சென்னைக் கால்நடை மருத்துவக் கல்லூரி, திருநெல்வேலி, ஒரத்தநாடு, நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையங்கள், கால்நடை உற்பத்தி கல்விப் பிரிவுகள், விரிவாக்கக் கல்வி இயக்குநரகம் மற்றும் கால்நடை உடல்நலக் கல்வி பிரிவு ஆகிய ஆறு அணிகள் பங்கேற்றன.
இப்போட்டியில் சென்னை கல்லூரி முதலிடமும், திருநெல்வேலி கல்லூரி இரண்டாமிடமும் பிடித்தன. இப்போட்டியில் சிறந்த பன்முகத் திறனாளர், தொடர்நாயகன் விருதை திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் மருத்துவர் ம. பூபதிராஜாவும், சிறந்த பேட்ஸ்மேன் விருதை சென்னை கால்நடை மருத்துவ கல்லூரி மருத்துவர் சக்திவேல் செல்வனும், சிறந்த பந்துவீச்சாளர் விருதை ஒ.ஆர். சத்தியமூர்த்தியும் பெற்றனர். சிறந்த விக்கெட் கீப்பர் விருதுகள் நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் மருத்துவர் உதயவேல் மற்றும் சென்னை கால்நடை மருத்துவ கல்லூரியைச் சேர்ந்த ஸ்ரீகுமார் ஆகியோருக்கு வழங்கப்பட்டன.
பரிசளிப்பு விழாவுக்கு தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சி. பாலச்சந்திரன் தலைமை வகித்தார். கிருஷ்ணா மைன்ஸ் பொதுமேலாளர் இரா. ரவிசங்கர் வாழ்த்திப் பேசினார். கல்லூரி முதல்வர் (பொ) ஜே. ஜாண்சன் ராஜேஸ்வர், விளையாட்டுச் செயலர் அ. சுந்தர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.