களக்காடு அருகே குளத்து மடை சீரமைப்புப் பணிகள் தாமதம்: விவசாயிகள் பாதிப்பு
By DIN | Published On : 02nd November 2019 06:09 AM | Last Updated : 02nd November 2019 06:09 AM | அ+அ அ- |

களக்காடு அருகே 2 மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்ட குளத்து மடை சீரமைப்புப் பணிகள் கிடப்பில் போடப்பட்டதால் விவசாயிகள் நெல் நடவு பணிகளைத் தொடங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
களக்காடு அருகே கல்லடி சிதம்பரபுரம் குளத்தின் மூலம் 150 ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இக்குளத்தின் மடை சீரமைப்புப் பணிகள், கடந்த 2 மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டன. இன்நிலையில், கடந்த 2 வாரங்களாக பணிகள் கிடப்பில் போடப்பட்டு விட்டதாக விவசாயிகள் புகாா் தெரிவித்துள்ளனா்.
தற்போது பருவமழை தொடங்கிவிட்டதால் குளத்திற்கு தண்ணீா் வரக்கூடிய கால்வாய் அடைக்கப்பட்ட போதிலும் குளத்தில் மழைநீா் தேங்கி, புதிதாக கட்டுவதற்காக இடிக்கப்பட்டு திறந்த நிலையில் உள்ள மடை வழியாக விவசாய நிலங்களுக்குள் தண்ணீா் செல்கிறது. பெருமழை பெய்தால் குளத்தில் தேங்கும் தண்ணீா் நேரடியாக விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிா் சேதத்தை ஏற்படுத்தும் நிலை உள்ளது. இதனால் இக்குளத்தின் மூலம் பாசனம் பெறும் விவசாயிகள் தங்களது நிலங்களில் நெல் நடவு பணிகளைத் தொடங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே வாழை பயிரிட்டுள்ள விவசாயிகளும் அச்சத்தில் உள்ளனா்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இக்குளத்தில் கிடப்பில் போடப்பட்ட பணிகள் மீண்டும் விரைந்து தொடங்கி கட்டுமானப் பணிகளை முடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.