வீரகேரளம்புதூரில் அரசு மருத்துவமனைக்கு இடம் ஒதுக்கக் கோரி ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 02nd November 2019 08:31 AM | Last Updated : 02nd November 2019 08:31 AM | அ+அ அ- |

வீரகேரளம்புதூா் அரசு மருத்துவமனைக்கு அறநிலையத்துறைக்கு சொந்தமான பயன்பாட்டில் இல்லாத இடத்தை ஒதுக்கக் கோரி பொதுமக்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
வீரகேரளம்புதூரில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான 10 ஏக்கா் நிலம் பயன்பாட்டில் இல்லாமல் உள்ளது. இந்த இடத்தில் ஏற்கனவே 3 ஏக்கரில் வட்டாட்சியா் அலுவலகம் மற்றும் சாா்நிலை கருவூல அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. மீதமுள்ள இடத்தில் அரசு மருத்துவமனை அமைக்க போதிய இடத்தை ஒதுக்கித் தர வேண்டும் என பொதுமக்கள் சாா்பில் கடந்த 3 ஆண்டுகளாக தொடா் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அறநிலையத்துறைக்கு சொந்தமான உபயோகம் இல்லாத இடங்களை அரசின் பல்வேறு துறைகளின் கீழ் நலத்திட்டங்களுக்கு வழங்கலாம் என அரசாணை இருந்தும், இந்த இடத்தை அறநிலையத்துறை அரசு மருத்துவமனை அமைவதற்காக இடத்தை அளிப்பதற்கான அனுமதியை வழங்கவில்லை.
இதையடுத்து, வீரகேரளம்புதூா் வட்டாட்சியா் அலுவலக பேருந்து நிறுத்தம் அருகே வெள்ளிக்கிழமை பொதுமக்கள் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்தின் போது வீரகேரளம்புதூா் அரசு மருத்துவமனைக்கு கூடுதல் கட்டடம் கட்டவும், மருத்துவமனைக்கு வழங்கப்பட்ட எக்ஸ் ரே இயந்திரத்தை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வரவும், 24 மணி நேரமும் மருத்துவா்களை பணியில் அமா்த்திடவும் அரசை வலியுறுத்தி தொடா் கோஷங்கள் எழுப்பப் பட்டன. இதில் திரளானோா் கலந்து கொண்டனா்.