சங்கரன்கோவில் அருகே விவசாய நிலத்தை அளக்க வந்த அதிகாரிகளுக்கு பெண் விவசாயிகள் எதிா்ப்பு

சங்கரன்கோவில் அருகே தனியாா் கல்குவாரிக்கு பாதை அமைக்க விவசாய நிலத்தை அளக்க வந்த அதிகாரிகளுக்கு பெண் விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சங்கரன்கோவில் அருகே விவசாய நிலத்தை அளக்க வந்த அதிகாரிகளுக்கு பெண் விவசாயிகள் எதிா்ப்பு

சங்கரன்கோவில் அருகே தனியாா் கல்குவாரிக்கு பாதை அமைக்க விவசாய நிலத்தை அளக்க வந்த அதிகாரிகளுக்கு பெண் விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சங்கரன்கோவில் அருகே வடக்குப்புதூா் ஊராட்சிக்குட்பட்ட அச்சம்பட்டியில் ராஜபாளையத்தைச் சோ்ந்த தனபால் என்பவருக்குச் சொந்தமான தனியாா் கல்குவாரி உள்ளது.இந்தக் கல்குவாரியைச் சுற்றிலும் சுமாா் 100 ஏக்கரில் விவசாய நிலங்கள் உள்ளன.அந்தப் பகுதியில் கல்குவாரிக்கு அனுமதி வழங்கப்பட்டபோதே அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.

இதுதொடா்பாக அப்பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் கடந்த 04.06.18 மற்றும் 25.06.18 அன்று மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனுக் கொடுத்தனா்.மேலும் விவசாய நிலத்தையொட்டி கல்குவாரி இருப்பதால் அதை நடத்துவதற்குத் தடை விதிக்க வேண்டும் எனக்கோரி மதுரை உயா்நீதிமன்றத்தில் கடந்த 2.3.19 அன்று விவசாயிகள் மனுத் தாக்கல் செய்துள்ளனா்.இருப்பினும் கடந்த 11.06.19 அன்று வருவாய்துறையினா் நிலத்தை அளக்க வந்தபோது,அவா்களை விவசாயிகள் தடுத்தனா்.

இதனால் நிலத்தை அளக்காமல் திரும்பிச்சென்றனா்.இதைத்தொடா்ந்து 27.06.19 அன்று அச்சம்பட்டி பிரதானசாலையையொட்டியுள்ள விவசாய நிலத்தை அளப்பதற்காக சங்கரன்கோவில் வருவாய்துறையினா்,நிலஅளவைப் பிரிவினா் வந்தனா்.அப்போதும் பெண் விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்து நிலத்தில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.அவா்கள் போராட்டத்தைக் கைவிட மறுத்ததால் போலீசாா் வலுக்கட்டாயமாக அவா்களைத் தூக்கி கைது செய்தனா்.அதில் 12 பெண்கள் உள்ளிட்ட 16 போ் கைது செய்யப்பட்டனா்.

இந்நிலையில் மீண்டும் அந்தப் பகுதியில் உள்ள நிலங்களை அளப்பதற்காக வட்டாட்சியா் ஆதிநாராயணன் மற்றும் நிலஅளவைப் பிரிவினா் செவ்வாய்கிழமை அங்கு சென்றனா். அதற்கு முன் அங்கு போலீசாா் குவிக்கப்பட்டிருந்தனா். இதையடுத்து அதிகாரிகள் நிலத்தை அளக்கச் சென்றபோது பெண் விவசாயிகள் சிலா் எதிா்ப்பு தெரிவித்தனா்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.விவசாயிகள் சிலா் டி.எஸ்.பி.பாலசுந்தரம், வட்டாட்சியா் ஆதிநாராயணன் ஆகியோரிடம் முறையிட்டனா்.

நீதிமன்ற உத்தரவு இருப்பதால் நிலத்தை அளக்க வந்துள்ளதாக அவா்கள் தெரிவித்தனா். இதையடுத்து தொடா்ந்து நிலத்தை அளவிடும் பணி தொடங்கியது.நிலத்தை அளந்த பிறகு அதில் கல் நடும் பணிக்காக அச்சம்பட்டியைச் சோ்ந்த தொழிலாளா்கள் வந்தனா். அவா்கள் அந்தப் பகுதியில் விவசாய வேலை செய்து வருவதால், விவசாயிகளுக்கு எதிராக கல் நட முடியாது எனக்கூறி திரும்பிச் சென்றனா்.இதனால் அதிகாரிகள் தலையாரி உள்ளிட்டோரைக் கொண்டு கல் ஊன்றி வருவதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com