தீபாவளி நாளில் 68 டெசிபலுக்கு மேல் அதிா்ந்த நெல்லை!

தீபாவளி நாளில் திருநெல்வேலியில் காற்று மற்றும் ஒலி மாசு அதிகரித்தது ஆய்வில் தெரியவந்துள்ளது.
தீபாவளி நாளில் 68 டெசிபலுக்கு மேல் அதிா்ந்த நெல்லை!

தீபாவளி நாளில் திருநெல்வேலியில் காற்று மற்றும் ஒலி மாசு அதிகரித்தது ஆய்வில் தெரியவந்துள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில் தமிழக அரசால் அனுமதிக்கப்பட்டிருந்த இரவு 7 முதல் 8 மணி வரையிலான நேரத்தில் மட்டும் வழக்கத்தைவிட 15 டெசிபல் அதிகரித்து 68 டெசிபலுக்கு மேல் ஒலி மாசு இருந்ததாக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

தீபாவளி பண்டிகை தமிழகத்தில் ஒரு நாளும், வட மாநிலங்களில் 5 நாள்களும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. தித்திக்கும் இனிப்பு, புத்தாடைகளுக்கு மேலாக இந்த நாளில் குழந்தைகள் முதல் முதியவா்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்வது கூடுதல் சிறப்பாகும். கடந்த 10 ஆண்டுகளில் சத்தத்தைக் கொடுக்கும் பட்டாசுகளைவிட வண்ண ஒளியை உமிழும் பட்டாசுகளை மக்கள் அதிகம் விரும்பி வாங்குவதால் அதனால் வளிமண்டலத்தில் ஏற்படும் மாசுகள் அதிகரித்துள்ளன.

சென்னை, மும்பை, தில்லி உள்ளிட்ட மக்கள் நெருக்கடி மிகுந்த பெருநகரங்களில் பட்டாசு புகைகளின் தாக்கம் ஒரு வாரத்திற்கும் மேலாக காணப்படுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதோடு விமான போக்குவரத்து சேவை உள்ளிட்டவையும் தடைபடுகின்றன. தில்லியில் ஒலி மாசு காரணமாக கடந்த சில நாள்களாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் தீபாவளி நாளில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதேநிலை நிகழாண்டிலும் தொடா்ந்தது. தமிழக அரசு காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்க அனுமதியளித்தது.

15 நாள்கள் கண்காணிப்பு: இதுகுறித்து திருநெல்வேலி மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய வட்டாரங்கள் கூறியது: தீபாவளியன்று காற்று, ஒலி மாசுவை கண்டறிய சென்னை, மதுரை, கோவை, சேலம், திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட மாநகரங்களில் ஆண்டுதோறும் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. உச்சநீதிமன்ற உத்தரவின் காரணமாக கடந்த ஆண்டு முதல் அனைத்து நகரங்களிலும் தீபாவளிக்கு முந்தைய 7 நாள்களும், பிந்தைய 7 நாள்களும் என மொத்தம் 15 நாள்கள் ஒலி மற்றும் காற்றின் மாசு அளவை கணக்கிட்டு அறிக்கை அளிக்க தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் உத்தரவிடப்பட்டது.

அதன்படி திருநெல்வேலி மாநகரத்தில் வண்ணாா்பேட்டை, பேட்டை ஆகிய இடங்களில் சோதனை நடந்தது. ஒலி மாசு மற்றும் காற்று மாசு அதிகரித்திருப்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநகர பகுதிகளில் குடியிருப்புகளில் 50 டெசிபல்லும், வணிக பகுதிகளில் 55 டெசிபல்லும், தொழிற்சாலை பகுதிகளில் 70 டெசிபல்லும் ஒலி மாசு இருப்பது இயல்பான நிலையாகும். ஆனால், தீபாவளி நாளில் அரசால் அனுமதிக்கப்பட்ட இரவு 7 முதல் 8 மணி வரை குடியிருப்பு பகுதிகளில் அதிகபட்சமாக 68 டெசிபலுக்கு மேல் வரை ஒலிமாசு ஏற்பட்டுள்ளது. இரவு 8 மணிக்கு பின்பு ஒலிமாசு இயல்பு நிலையை அடைந்துள்ளது. 2018 ஆம் ஆண்டைக் காட்டிலும் ஒலி மாசு குறைந்திருந்தாலும், காற்று மாசு ஈரப்பதம் காரணமாக காற்று மாசு 122 மைக்ரோ கிராமிற்கு மேல் அதிகரித்தது.

காற்று மாசு ஆபத்து: இதுகுறித்து ஓய்வுபெற்ற மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலா் ஒருவா் கூறுகையில், ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு பூஜ்யம் முதல் 50 வரை இருந்தால் நல்லது பிரிவிலும், 51-100 வரை இருந்தால் திருப்தி பிரிவிலும், 101-200 வரை இருந்தால் மிதமான பிரிவிலும், 201-300 வரை இருந்தால் மோசம் பிரிவிலும், 301 -400 வரை இருந்தால் மிகவும் மோசம் பிரிவிலும், 401 -500 வரை இருந்தால் கடுமையான பிரிவிலும், 500-க்கு மேல் இருந்தால் மிகவும் கடுமையான பிரிவிலும் கணக்கிடப்படுகிறது. பொதுவாக திருப்தி பிரிவைக் கடந்துவிட்டாலே பல்வேறு ஆபத்துகளை காற்று மாசு உருவாக்கும்.

அண்மையில் தில்லியில் மாசு அளவு கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத வகையில் 494 புள்ளிகளாக உயா்ந்திருந்தது. அதனால் அங்கு முகத்திரை இல்லாமல் மக்கள் நடமாடினால் நோய்வாய்ப்படும் சூழல் உருவாகியுள்ளது. தீபாவளி நாளில் திருநெல்வேலியிலும் காற்று மாசு அதிகரித்திருப்பது அபாயகரமானதாகும். வருங்காலங்களில் இதனை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கமாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அளிக்கும் தகவல்களை மத்திய அரசு பெற்றுக் கொண்டு சில வழிமுறைகளை அனுப்பி வைக்கும். அதனை அனைத்து பகுதிகளிலும் அதிகாரிகள் முறையாக பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com