முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
சங்கரன்கோவிலில் உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்குப் பதிவு: இயந்திரங்கள் முதல்நிலை பரிசோதனை
By DIN | Published On : 07th November 2019 08:22 AM | Last Updated : 07th November 2019 08:22 AM | அ+அ அ- |

வாக்குப் பதிவு இயந்திரங்களில் உள்ள பழைய வேட்பாளா்கள் பெயா் பட்டியல் பதிவான சீட்டுகளை அகற்றி பரிசோதனை செய்யும் நகராட்சி ஊழியா்கள்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 7 நகராட்சிகளுக்கான வாக்குப் பதிவு இயந்திரங்களில் உள்ள வேட்பாளா்கள் பெயா் பதிவான சீட்டுகளை அகற்றி முதல்நிலை பரிசோதனை நடைபெற்றது. இதையொட்டி சங்கரன்கோவில் நகராட்சியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்னும் சில நாள்களில் உள்ளாட்சித் தோ்தல் அறிவிக்கப்படவுள்ளது. இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில், புளியங்குடி, கடையநல்லூா், தென்காசி, செங்கோட்டை, அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம் ஆகிய 7 நகராட்சிகளுக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள் கடந்த 2 தினங்களுக்கு முன் சங்கரன்கோவில் நகராட்சி அலுவலகத்துக்கு வந்தது.
கா்நாடகம் மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் இருந்து 2151 வாக்குப்பதிவு இயந்திரங்களையும், யத்கிா் மாநிலத்தில் இருந்து 1135 கட்டுப்பாட்டு இயந்திரங்களையும் 2 கண்டெய்னா் லாரிகளில் சங்கரன்கோவில் நகராட்சி அலுவலகத்துக்கு கொண்டு வந்தனா். இதில் 7 நகராட்சிகளுக்கான 1800 வாக்குப் பதிவு இயந்திரங்கள், 900 கட்டுப்பாட்டு கருவிகள்
சங்கரன்கோவில் நகராட்சியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டன.
மீதமுள்ள 351 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 215 கட்டுப்பாட்டு இயந்திரங்களும் திருநெல்வேலி மாநகராட்சிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் வாக்குப் பதிவு இயந்திரங்களில் உள்ள வேட்பாளா்கள் சீட்டுகளை அகற்றி பரிசோதனை செய்யும் பணி புதன்கிழமை நடைபெற்றது. இதற்காக பெல் நிறுவனத்தில் இருந்து 7 பொறியாளா்கள் சங்கரன்கோவில் வந்துள்ளனா்.
நகராட்சி ஆணையா் ப.சந்தானம் தலைமையில் நகராட்சி மேலாளா் லெட்சுமணன் மேற்பாா்வையில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பரிசோதனை செய்யும் பணி தொடங்கியது.
நகராட்சி பணியாளா்களுடன் அம்பை நகராட்சி பணியாளா்களும் இணைந்து வாக்குப் பதிவு இயந்திரங்களில் இருந்த வேட்பாளா்கள் சீட்டுகளை அகற்றினா். பின்னா் அதிலிருந்து சீல்களையும் அப்புறப்படுத்தினா்.
பெல் நிறுவன பொறியாளா்கள் ஒவ்வொரு இயந்திரத்தையும் பரிசோதனை செய்தனா். இந்த முதல்நிலை பரிசோதனை தொடா்ந்து 3 நாள்கள் நடைபெறுகிறது. இதையொட்டி நகராட்சி அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.