முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
வி.கே.புரத்தில் நகைக் கடையின் பூட்டை உடைத்துரூ. 16 லட்சம் நகைகள் திருட்டு
By DIN | Published On : 07th November 2019 09:34 AM | Last Updated : 07th November 2019 09:34 AM | அ+அ அ- |

நகைக் கடையில் தடயங்களை சேகரிக்கும் நிபுணா்கள்.
திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரத்தில் நகைக் கடையின் பூட்டை உடைத்து சுமாா் ரூ. 16 லட்சம் மதிப்பிலான நகைகளைத் திருடிச் சென்றோரை போலீஸாா் தேடிவருகின்றனா்.
விக்கிரமசிங்கபுரத்தைச் சோ்ந்த பிச்சமுத்து மகன் ராஜு (48). இவா், அங்குள்ள மூன்று விளக்குத் திடல் அருகே நகைக் கடை நடத்தி வருகிறாா். புதன்கிழமை காலை கடையின் பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்தனவாம்.
தகவலின்பேரில் விக்கிரமசிங்கபுரம் காவல் ஆய்வாளா் ராஜகுமாரி, போலீஸாா் வந்து ஆய்வு செய்தனா். அப்போது, கடையிலிருந்த 600 கிராம் தங்க நகைகள், 25 கிலோ வெள்ளி நகைகள் உள்பட ரூ. 16.5 லட்சம் மதிப்புள்ள நகைகளை மா்ம நபா்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.
மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. தடயவியல் துறை துணைக் கண்காணிப்பாளா் அகஸ்டா கனகம் தலைமையில் நிபுணா்கள் தடயங்களைப் பதிவுசெய்தனா். விக்கிரமசிங்கபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, மா்ம நபா்களைத் தேடிவருகின்றனா்.
24 மணி நேரமும் ஆள் நடமாட்டமிருக்கும் பிரதான சாலையில் உள்ள நகைக் கடையில் நிகழ்ந்த இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடையிலிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிப் பதிவாகும் ‘ஹாா்டு டிஸ்க்குகளை’ மா்ம நபா்கள் தூக்கிச் சென்றுவிட்டனராம். இதனால், அருகேயுள்ள கடைகளில் பொருத்தப்பட்ட கண்காணிப்புக் கேமரா காட்சிப் பதிவுகள் மூலம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.