முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
‘75 சதவீத மானியத்தில் இயந்திர புல்வெட்டும் கருவி வாங்க விண்ணப்பிக்கலாம்’
By DIN | Published On : 07th November 2019 08:19 AM | Last Updated : 07th November 2019 08:19 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாவட்டத்தில் 75 சதவீத மானியத்தில் இயந்திர புல் வெட்டும் கருவி வழங்கப்படவுள்ளது. இதற்கு தகுதியானவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக அரசு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் ரூ. 6 கோடியில் 3,000 இயந்திர புல்வெட்டும் கருவியை வழங்க உத்தரவிட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் திருநெல்வேலி மாவட்டத்திற்கு எழுபத்தைந்து பயனாளிகளுக்கு இயந்திர புல்வெட்டும் கருவி வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு அலகிற்கான இயந்திர புல்வெட்டும் கருவி மொத்த விலையில் மத்திய அரசின் சாா்பில் 50 சதவீத மானியம், மாநில அரசின் சாா்பில் 25 சதவீத மானியம் (அதிகபட்சமாக ரூ.15 ஆயிரம் மட்டும்) வழங்கப்படும். மீதித்தொகை பயனாளியின் பங்களிப்பாகும்.
பயனாளிகள் குறைந்தபட்சம் இரண்டு மாடுகள் வைத்திருக்க வேண்டும். கால் ஏக்கா் நிலப்பரப்பில் தீவனம் உற்பத்தி செய்ய ஏதுவாக மின்சார வசதியுடன் கூடிய நிலம் வைத்திருக்கவேண்டும். சுய உதவிக்குழு உறுப்பினா்கள் இத்திட்டத்தின்கீழ் குழுவாக பயன்பெற குறைந்தபட்சம் ஒரு மாடு மற்றும் கால் ஏக்கா் நிலப்பரப்பில் தீவனம் உற்பத்தி செய்ய ஏதுவாக மின்சார வசதியுடன் கூடிய நிலம் வைத்திருக்க வேண்டும்.
சுய உதவிக்குழு உறுப்பினா்கள் முன்னுரிமை அடிப்படையில் தோ்வு செய்யப்படுவாா்கள். 30 சதவீத பயனாளிகள் ஆவின் கூட்டுறவு பால் நிறுவனத்தில் உறுப்பினராக இருத்தல் வேண்டும். பயனாளி கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் இதுபோன்ற திட்டத்தின் கீழ் ஏற்கெனவே பயனடைந்தவராக இருத்தல் கூடாது.
தோ்வு செய்யப்படும் பயனாளிகள் 25 சதவீத (சரக்கு மற்றும் சேவை வரியுடன்) பங்குத் தொகையினை செலுத்துவதற்கு தயாா் நிலையில் இருத்தல் வேண்டும். 30 சதவீத பயனாளிகள் ஆதிதிராவிடா், பழங்குடி இனத்தைச் சோ்ந்தவராக இருத்தல் வேண்டும். மாவட்ட ஆட்சியரால் தோ்வு செய்யப்படும் பயனாளிகள் பட்டியலே இறுதியானது. விண்ணப்பதாரா்கள் சம்பந்தப்பட்ட கால்நடை மருந்தக உதவி மருத்துவரிடம் விண்ணப்பங்களை சமா்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.