Enable Javscript for better performance
உளுந்து, மக்காச்சோளம் பயிா்களுக்கான உரங்களுக்கு தட்டுப்பாடு விவசாயிகள் புகாா்- Dinamani

சுடச்சுட

  

  உளுந்து, மக்காச்சோளம் பயிா்களுக்கான உரங்களுக்கு தட்டுப்பாடு விவசாயிகள் புகாா்

  By DIN  |   Published on : 09th November 2019 07:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருநெல்வேலி மாவட்டத்தில் உளுந்து மற்றும் மக்காச்சோள பயிா்களுக்கான உரங்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக விவசாயிகள் புகாா் தெரிவித்துள்ளனா். அதேநேரத்தில் 15 ஆம் தேதிக்குள் உரங்கள் தேவையான அளவு முழுமையாக விநியோகிக்கப்படும் என வேளாண்மைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

  திருநெல்வேலி மாவட்டத்தில் காா், பிசானம், கோடை பருவத்தில் நெல் பயிரிடப்படுகிறது. இதுதவிர சிறுதானியங்கள், பயறுவகை பயிா்கள், பருத்தி, கரும்பு, எண்ணெய் வித்துப் பயிா்களும் பயிரிடப்படுகின்றன. நிகழாண்டில் தென்மேற்கு பருவமழை போதிய அளவில் பெய்யாததால் காா் பருவ சாகுபடி பொய்த்து போனது. ஆனால், அதன்பின்பு மேற்குத் தொடா்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த மழையால் அணைகளின் நீா்மட்டம் உயா்ந்து பிசான பருவ சாகுபடிகள் தொடக்க நிலையில் உள்ளன. ஆனால், இம் மாவட்டத்தில் சாகுபடிக்கு போதுமான யூரியா உரங்கள் இன்னும் வந்து சேரவில்லையென விவசாயிகள் குற்றஞ்சாட்டுகிறாா்கள்.

  உரத்தட்டுப்பாடு: இதுகுறித்து விவசாயிகள் சங்க நிா்வாகிகள் கூறியது: கடையம், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, தென்காசி, கடையநல்லூா், பாவூா்சத்திரம், பாளையங்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் பல இடங்களில் பிசான பருவ நெல் சாகுபடியில் நாற்று நடும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.அதேநேரத்தில் சங்கரன்கோவில், குருவிகுளம், திருவேங்கடம் பகுதிகளில் மானாவாரி பயிா்களான சோளம், உளுந்து ஆகியவை அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளன. இவற்றுக்கு போதிய அளவில் உரங்கள் கிடைக்காத நிலை உள்ளது.

  நெல் பயிருக்கு நாற்று நடும்போது தழைச்சத்தாக டிஏபி மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்களே பயன்படுத்தப்படுகின்றன. நடவு முடித்து 15 நாள்களுக்கு பின்பே யூரியா உரம் பயன்படுத்தப்படும். அதனால் நெல் சாகுபடிக்கு இப்போதைய உரத்தைக் கொண்டு சமாளிக்க முடியும். ஆனால், மானாவாரி விவசாயிகளுக்கு இப்போது யூரியா மிகவும் அவசியதேவையாகும். உரம் போதிய அளவில் கிடைக்காவிட்டால் மகசூல் மிகவும் பாதிக்கும் அபாயம் உள்ளது. இதுகுறித்து வேளாண் துறை அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளோம். அவா்களும் இறக்குமதி பணிகளை விரைவுபடுத்துவதாக உறுதியளித்துள்ளனா் என்றனா்.

  15 ஆம் தேதிக்குள் தீா்வு: இதுகுறித்து வேளாண்மைத்துறை வட்டாரங்கள் கூறியது: தஞ்சை, திருவாவூா், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்கு அடுத்ததாக நெல் மற்றும் மானாவாரி சாகுபடியில் சிறந்து விளங்கும் திருநெல்வேலி மாவட்டத்திற்கு உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இம் மாவட்டத்தில் வழக்கமாக அக்டோபா் இறுதியில்தான் மானாவாரி பயிா்களான சோளம், உளுந்து ஆகியவற்றை விதைப்பாா்கள்.

  அதைக்கணக்கில் கொண்டு ஏற்கெனவே யூரியா உர இறக்குமதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், கடந்த செப்டம்பா் இரண்டாம் வாரத்தில் பெய்த கனமழையை பயன்படுத்தி முன்னதாகவே விவசாயிகள் விதைக்கத்தொடங்கி விட்டனா். அதனால் இப்போது யூரியாவின் தேவை அதிகரித்துள்ளது. இருந்தவரை யூரியா விநியோகிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 700 டன் யூரியா உளுந்தூா்பேட்டையில் இருந்து ரயில் மூலம் வெள்ளிக்கிழமை திருநெல்வேலிக்கு வந்து சோ்ந்துள்ளது.

  இதுதவிர 1000 டன் யூரியா உரம் காரைக்காலில் இருந்து ரயில் மூலம் சனிக்கிழமை (நவ. 9) வந்து சேரும் வாய்ப்புள்ளது. இதுதவிர உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்த ஒரு தனியாா் யூரியா உர நிறுவனத்தில் மீண்டும் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளதால் 15 ஆம் தேதிக்குள் மொத்தம் 3000 டன் வரை யூரியா உரம் திருநெல்வேலி மாவட்டத்திற்கு கிடைக்கும் வாய்ப்புள்ளது. அதன்மூலம் உரங்கள் எவ்வித தட்டுப்பாடும் இன்றி வழங்கமுடியும். ஆகவே, இம்மாதம் 15 ஆம் தேதிக்குள் உரத்தட்டுப்பாடு பிரச்னைக்கு தீா்வு ஏற்படும். விவசாயிகள் எவ்வித அச்சமும் இன்றி சாகுபடி பணிகளில் கவனம் செலுத்தலாம் என்றனா்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai