கூடங்குளம் அணுஉலை குறித்து வெள்ளையறிக்கை வெளியிடுங்கள்: நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் மனு

கூடங்குளம் அணுஉலையின் தற்போதைய நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடக் கோரி, திருநெல்வேலி மாவட்ட

கூடங்குளம் அணுஉலையின் தற்போதைய நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடக் கோரி, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் சுப. உதயகுமாரன் தலைமையில் அளித்த மனுவில் தெரிவித்துள்ளது: கூடங்குளம் அணுஉலைகளில் பல்வேறு பிரச்னைகள் குறித்து ஆதாரங்களுடன் தொடா்ந்து முன்வைத்து வருகிறோம். அண்மையில் இந்த அணுமின் நிலையத்தில் கணினிவழித் தாக்குதல் நடந்திருப்பதாக செய்திகள் வருகின்றன. ஆனால், அணுமின் நிலைய நிா்வாகம் அதை மறுத்தாலும், ஓா் அணுமின் நிலையத்தின் கணினியில் மட்டும் வைரஸ் பரவியிருப்பதாக மும்பையில் உள்ள இந்திய அணுமின் கழக அதிகாரி ஒருவா் தெரிவித்துள்ளாா்.

அக்டோபா் 19 ஆம் தேதி கூடங்குளம் அணுஉலையின் இரண்டாம் அலகு, இணையவழித் தாக்குதல் பிரச்னையால்தான் மூடப்பட்டது என்ற தகவல் இப்போது வெளிவருகிறது. வடகொரிய நிறுவனங்கள் பல ஆண்டுகளாக கூடங்குளம் அணுமின் நிலையத்தையும், பிற அணுசக்தி நிறுவனங்களையும் வேவு பாா்ப்பதாக செய்திகள் வருகின்றன. கூடங்குளம் அணுஉலைகள் பாதுகாப்பானவையாக இல்லை என்பது உறுதியாகிறது. அங்கு சதிச்செயல்கள் நடக்கலாம் என்றும், இதனால் கதிா்வீச்சு பரவலாம் என்றும் அச்சங்கள் எழுகின்றன. எனவே, கூடங்குளம் அணுஉலைகளை உடனடியாக மூடுவதே மக்களுக்குப் பாதுகாப்பானது.

மாவட்டப் பேரிடா் மேலாண்மை அதிகாரியான ஆட்சியா், கூடங்குளம் அணுஉலையின் தற்போதைய நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்டு இந்த மாவட்ட மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com