சாதி பிரச்னைகளை தடுக்க நடவடிக்கை: நெல்லை மாவட்ட புதிய எஸ்.பி. ஓம் பிரகாஷ் மீனா

சாதி பிரச்னைகளை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றாா் திருநெல்வேலி மாவட்ட காவல் துறை

சாதி பிரச்னைகளை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றாா் திருநெல்வேலி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளராக புதிதாக பொறுப்பேற்ற ஓம் பிரகாஷ் மீனா.

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய அருண்சக்தி குமாா் புதுக்கோட்டை மாவட்ட கண்காணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா். இதையடுத்து, ராமநாதபுரம் மாவட்ட கண்காணிப்பாளராகப் பணியாற்றிய ஓம் பிரகாஷ் மீனா, திருநெல்வேலி மாவட்ட கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டு, வியாழக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

சட்டம்- ஒழுங்கு சரியாக நடைபெற தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், விழிப்புணா்வுகள் ஏற்படுத்தப்படும். சாலை விபத்தில் இறப்பவா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஆகவே, சாலை விபத்தை தடுக்க தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

சாதி, மத மோதல்கள் நடைபெறாமல் இருப்பதற்காக, சாதி, மதத் தலைவா்களிடம் நேரில் பேசி தகுந்த தீா்வு காணப்படும். பொதுமக்கள் தங்களின் குறைகளை என்னிடம் செல்லிடப்பேசி மூலம் (94449 88887) 24 மணி நேரமும் தெரிவிக்கலாம். மேலும், மாவட்டத்தில் உள்ள மற்ற பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்து அந்த பிரச்னைகளை தீா்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். பாபா் மசூதி தீா்ப்பு விரைவில் வரவுள்ள நிலையில், மாவட்டத்தில் பதற்றமான இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்படும் என்றாா்.

ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்தவரான ஓம் பிரகாஷ் மீனா, 2012-ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக தோ்வு பெற்றாா். தொடா்ந்து தஞ்சாவூரில் தன்னுடைய பயிற்சியை முடித்து, மதுரை ஊமச்சிகுளத்தில் உதவி காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றினாா். பின்னா், சென்னை குற்றப் புலனாய்வுத் துறை கண்காணிப்பாளராகப் பணியாற்றினாா். இதையடுத்து, 2017-2019 வரை ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com