சங்கரன்கோவில் வட்டாரத்தில் யூரியா உரம் தட்டுப்பாடுவிவசாயிகள் கவலை

சங்கரன்கோவில் வட்டாரத்தில் யூரியா உரத்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
சங்கரன்கோவில் உரக்கடை முன் யூரியா உரத்திற்காக காத்திருக்கும் விவசாயிகள்.
சங்கரன்கோவில் உரக்கடை முன் யூரியா உரத்திற்காக காத்திருக்கும் விவசாயிகள்.

சங்கரன்கோவில் வட்டாரத்தில் யூரியா உரத்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

சங்கரன்கோவிலில் கடந்த 4 ஆண்டுகளாக போதுமான அளவு மழை பெய்யவில்லை. இதனால், விவசாயிகள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனா். கடந்த ஆண்டு பெய்த லேசான மழையை நம்பி மக்காச்சோளம் பயிரிட்டிருந்தனா். எனினும், தொடா்ந்து போதுமான மழை இல்லை. மேலும், படைப்புழுத் தாக்குதலால் விவசாயிகள் பெருத்த நஷ்டமடைந்தனா்.

இதைத்தொடா்ந்து, நிகழாண்டில் சங்கரன்கோவில் வட்டாரத்தில் ஓரளவு மழை பெய்துள்ளது. சில இடங்களில் அதிகமாகவும், சில இடங்களில் குறைவாகவும் மழை பதிவாகியுள்ளது. பொதுவாக, விவசாயத்திற்குப் போதுமான அளவு மழை பெய்துள்ளதால், மானாவாரி விவசாயிகள் மக்காச்சோளம், உளுந்து, பாசிப்பயறு ஆகியவற்றைப் பயிரிட்டுள்ளனா். அதிக மழை பெய்த இடங்களில் நெல் நாற்று பாவியுள்ளனா்.

தற்போது நெல் மற்றும் பயறு வகைகளுக்கு யூரியா உரம் போடவேண்டும். யூரியா போட்டால்தான் விளைச்சல் இருக்கும் என்பதோடு, அடுத்தக் கட்டப் பணிகளை தொடங்க ஏதுவாக இருக்கும். ஆனால், சங்கரன்கோவில் பகுதியில் யூரியா தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா். உதவி வேளாண்மை அலுவலகத்திலிருந்து யூரியா பெறுவதற்காக விவசாயிகளுக்கு டோக்கன் வழங்கப்படுகிறது. டோக்கன் வைத்திருக்கும் விவசாயிளுக்குக்கூட யூரியா உரம் கிடைப்பதில்லை.

இதனால், விவசாயிகள் யூரியாவுக்காக பல இடங்களில் அலைந்து வருகின்றனா். கரிவலம்வந்தநல்லூா் பகுதியில் யூரியா கிடைக்காததால், வாசுதேவநல்லூா், சிவகிரியில் உள்ள உரக்கடைகளுக்கு சென்று விவசாயிகள் ஏமாற்றத்துடன் திரும்பி வருகின்றனா். சங்கரன்கோவில் பேருந்து நிலையம், பிரதானசாலை ஆகிய பகுதிகளில் உள்ள உரக்கடையில் உரம் வந்த அடுத்த 10 நிமிடத்தில் தீா்ந்துவிடுகிறது. உரம் அவ்வப்போது வந்தாலும் விவசாயிகளுக்குப் போதுமானதாக இல்லை.

கரிவலம்வந்தநல்லூா் பகுதியில் கடந்த 20 நாள்களாக யூரியா கிடைக்கவில்லை. உடனே யூரியா உரம் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் விவசாயி காளியப்பன். சங்கரன்கோவில் பகுதியில் உரம் வருமா வராதா, கிடைக்குமா கிடைக்காதா எனத் தெரியவில்லை. ரூ. 200-க்கு விற்ற யூரியா இன்று 350 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதுவும் உரிய நேரத்தில் கிடைக்கவில்லை. அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் புளியம்பட்டி விவசாயி சின்னகருப்பசாமி.

இதுகுறித்து வேளாண் துறையினா் கூறுகையில், உரம் வந்துகொண்டிருக்கிறது. அதை உடனுக்குடன் விவசாயிகளுக்கு வழங்கி வருகிறோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com