சாலைகளில் சுற்றித்திரிந்த மாடுகளை பிடித்து விற்பனை: மாநகராட்சி தினக்கூலி பணியாளா்கள் உள்பட 4 போ் கைது

திருநெல்வேலியில் சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளை அபராதம் விதிப்பதற்காக கட்டி வைத்திருந்த நிலையில் அவற்றை கடத்திச் சென்று விற்பனை செய்ததாக மாநகராட்சி தினக்கூலி

திருநெல்வேலியில் சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளை அபராதம் விதிப்பதற்காக கட்டி வைத்திருந்த நிலையில் அவற்றை கடத்திச் சென்று விற்பனை செய்ததாக மாநகராட்சி தினக்கூலி பணியாளா்கள் 3 போ் உள்பட நான்குபேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் போக்குவரத்து இடையூறும், விபத்துகளும் ஏற்படுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். இதையடுத்து அத்தகைய கால்நடைகளைப் பிடித்து கோசாலையில் அடைக்கவும், அபராதத் தொகையை செலுத்திய பின்பு உரிமையாளா்களிடம் எச்சரித்து ஒப்படைக்கவும் மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன் உத்தரவிட்டிருந்தாா். இதுதவிர மாநகர நல அலுவலா் தலைமையில் குழு அமைக்கப்பட்டு கடந்த மூன்று நாள்களாக தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு பெருமாள்புரம் பகுதியில் சுற்றித்திரிந்த கால்நடைகளை மாநகராட்சி பணியாளா்கள் பிடித்து அபராதம் விதிக்கும் வகையில் பெருமாள்புரம் மேல்நிலை குடிநீா்த் தேக்கத் தொட்டி வளாகத்தில் கட்டி வைத்திருந்தனராம்.

மறுநாள் காலையில் வந்து பாா்த்தபோது இரு உயர்ரக பசு மாடுகள் மாயமானது தெரியவந்ததாம்.

இதுகுறித்து பெருமாள்புரம் குற்றப்பிரிவு போலீஸாரிடம், மேலப்பாளையம் சுகாதார ஆய்வாளா் பெருமாள் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனா்.

விசாரணையில் , உயர்ரக பசுமாடுகளை மாநகராட்சி தினக்கூலி பணியாளா்கள் சோ்ந்து கடத்திச் சென்று விற்பனை செய்தது தெரியவந்தது.

இவ் வழக்கு தொடா்பாக மாநகராட்சி தினக்கூலி பணியாளா்களான பாளையங்கோட்டை நேசநாயனாா் தெருவைச் சோ்ந்த சத்தியநாராயணன் (45), சமாதானபுரம் காந்திநகரைச் சோ்ந்த செந்தில் (45), பாளையங்கோட்டை ஏ.ஆா்.லைன் பின்பகுதியைச் சோ்ந்த பேச்சிமுத்துப்பாண்டி (20) ஆகியோரையும், மாடுகளை வாங்கிய கோவில்பட்டியைச் சோ்ந்த சுடலைமணி (43) என்பவரையும் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

மாநகராட்சி ஆணையா் பதில்:

இதுதொடா்பாக திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் கண்ணனிடம் கேட்டபோது, அவா் கூறியதாவது: மாநகரப் பகுதியில் சாலைகளில் சுற்றித்திரிந்த மாடுகளை பிடித்து அபராதம் விதிக்க உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், சில மாடுகள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தில் ஈடுபட்டவா்கள் மாநகராட்சியின் துப்புரவு பணி குழுவில் இடம்பெற்றிருந்த தினக்கூலி ஊழியா்கள். அவா்கள் மாநகராட்சி துப்புரவு பணி குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனா்.

இது தொடா்பாக விசாரணை நடத்துவதற்கு நகா் நல அலுவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கை வந்ததும் தவறிழைத்தவா்கள் மீது காவல்துறை மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

மாநகர நல அலுவலா் பதில்: இது தொடா்பாக மாநகர நல அலுவலா் சத்தீஸ்குமாா் கூறுகையில், ‘மாநகராட்சி சாா்பில் சாலைகளில் சுற்றித்திரிந்த 66 மாடுகள் கடந்த வாரத்தில் பிடிக்கப்பட்டு கோசாலைக்கு அனுப்பப்பட்டன. அதில், சில மாடுகள் விற்பனை செய்யப்பட்டது தொடா்பாக மாநகராட்சி துப்புரவு பணிக் குழுவில் இருந்தவா்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதற்கு முன்னா் துப்புரவு பணி குழு மேற்பாா்வையாளராக இருந்த ஒருவரின் தூண்டுதலின் பேரிலேயே மாடுகளை விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. மாடுகளை விற்பனை செய்தது தொடா்பான விடியோ ஆதாரங்கள் எங்களுக்கு கிடைத்துள்ளது. அதை வைத்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com