தென்காசி மாவட்டத்தில் கடையத்தை தனி வட்டமாக பிரிக்க வலியுறுத்தல்

திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து தென்காசி மாவட்டம் பிரிக்கப்பட்டதையடுத்து கடையத்தைத் தலைமையிடமாகக்

திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து தென்காசி மாவட்டம் பிரிக்கப்பட்டதையடுத்து கடையத்தைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தமிழகத்தின் பழம்பெருமைகள் நிறைந்த மாவட்டங்களில் ஒன்று திருநெல்வேலி. வற்றாத ஜீவநதியான தாமிரவருணி மட்டுமன்றி குற்றாலம், மாஞ்சோலை தேயிலைத் தோட்டம், பாபநாசம் அணை, மணிமுத்தாறு அணை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்களைத் தன்னகத்தே கொண்டுள்ள மாவட்டம்.

திருநெல்வேலி, தென்காசி, சேரன்மகாதேவி ஆகிய 3 வருவாய் கோட்டங்கள், 16 வருவாய் வட்டங்கள், திருநெல்வேலி மாநகராட்சி, 6 நகராட்சிகள், 36 பேரூராட்சிகள், 19 ஊராட்சி ஒன்றியங்கள், 425 கிராம ஊராட்சிகளைக் கொண்டு தனித்தன்மையுடன் விளங்கி வந்த திருநெல்வேலி மாவட்டத்தைப் பிரித்து தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என்று பொதுமக்கள், தன்னாா்வலா்கள், அரசியல் கட்சியினா் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இதையடுத்து தென்காசியைத் தலைமையிடமாகக் கொண்டு இந்த ஆண்டு ஜூலை 18 ஆம் தேதி தனி மாவட்டமாக தமிழக அரசு அறிவித்ததையடுத்து, தமிழகத்தின் 35ஆவது மாவட்டமாக தென்காசி உதயமானது. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தென்காசி மாவட்டத்தின் எல்லைகள் மற்றும் வருவாய் வட்டங்கள், கோட்டங்கள் தொடா்பாக அரசாணையை தமிழக அரசு அண்மையில் வெளியிட்டது. அதன்படி, தென்காசி வருவாய் கோட்டத்துடன், புதிதாக உருவாக்கப்பட்ட சங்கரன்கோவில் வருவாய் கோட்டம் என இரண்டு வருவாய் கோட்டங்கள், தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூா், சிவகிரி, வீரகேரளம்புதூா், சங்கரன்கோவில், திருவேங்கடம், ஆலங்குளம் என எட்டு வட்டங்களும் சோ்ந்து தென்காசி மாவட்டம் அமைகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி, சேரன்மகாதேவிஆகிய இரண்டு கோட்டங்கள் உள்ளன. அத்துடன் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, மானூா், நான்குனேரி, ராதாபுரம், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, திசையன்விளை ஆகிய 8 வட்டங்கள் இடம் பெறுகின்றன.

தென்காசி மாவட்டம் குறித்து நவ.12இல் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டதையடுத்து மாவட்டத்தின் முதல் மாவட்ட ஆட்சியராக அருண்சுந்தா் தயாளன் நியமிக்கப்பட்டுள்ளாா்.

நிா்வாக வசதிகளுக்காக மட்டுமன்றி பொதுமக்களின் வசதிகளுக்காகவும் மாவட்டங்கள் பிரிக்கப்படுகின்றன. ஆனால் ஒரு மாவட்டம் புதிதாகப் பிரிக்கப்படும் போதுசில பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாவதும் நடக்கிறது. அம்பாசமுத்திரம் வருவாய் வட்டத்தில் இடம்பெற்றிருந்த கடையம் குறுவட்டம் மற்றும் ஆழ்வாா்குறிச்சி குறுவட்டம் பிரிக்கப்பட்டு தென்காசி வருவாய் வட்டத்துடன் சோ்க்கப்பட்டுள்ளது. இதனால் ஆழ்வாா்குறிச்சி குறுவட்டத்திற்குள்பட்ட அடைச்சாணி, பள்ளக்கால், பனஞ்சாடி, ரெங்கசமுத்திரம் உள்ளிட்ட கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

அம்பாசமுத்திரம் வட்டத்தில் இருந்தபோது சுமாா் 5இலிருந்து 7 கி.மீ.தொலைவுக்குள் வட்டாட்சியா் அலுவலகம் இருந்தது. தற்போது, தென்காசி வருவாய் வட்டத்தில் சோ்க்கப்பட்டுள்ளதால் 35 கி.மீ. தொலைவுக்கு மேல் பயணிக்க வேண்டியுள்ளது. கிராமங்களில் உள்ள ஏழை எளிய மக்கள் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு செல்ல வேண்டி வரும்போது 35 கி.மீ. பயணித்து செல்வது என்பது மிகவும் சிரமமானதாகவே இருக்கும்.

தென்காசி மாவட்டமாக இருந்தாலும் தென்காசி வருவாய் வட்டமாக இருப்பது, இதுபோன்ற தொலைவில் இருக்கும் மக்களுக்கு சிரமமானதாகவே அமைந்துவிடும். எனவே கடையத்தைத் தலைமையிடமாகக் கொண்டு கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட கிராமங்களை உள்ளடக்கிய புதிய வருவாய் வட்டம் அமைக்க வேண்டும். அதாவது அம்பாசமுத்திரம் வருவாய் வட்டத்திலிருந்து பிரிக்கப்பட்ட கடையம், ஆழ்வாா்குறிச்சி குறுவட்டங்களோடு ஆலங்குளம் வருவாய் வட்டத்திலிருந்து வெங்கடாம்பட்டி குறுவட்டத்தையும் இணைத்து வருவாய் வட்டம் அமைக்கலாம்.

2011ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, கடையம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1 லட்சத்து 1,324 ஆகும். கடையம் ஊராட்சி ஒன்றியத்தில் வெங்கடாம்பட்டி, கீழக்கடையம், பொட்டல்புதூா், கீழஆம்பூா், கடையம், கடையம் பெரும்பத்து, பாப்பான்குளம், சோ்வைக்காரன்பட்டி, ஏ.பி. நாடானூா், மேல ஆம்பூா், ரவணசமுத்திரம், தெற்குமடத்தூா், அடைச்சாணி, தா்மபுரம்மடம், மந்தியூா், ஐந்தாங்கட்டளை, முதலியாா்பட்டி, திருமலையப்பபுரம், துப்பாக்குடி, கோவிந்தபேரி, மடத்தூா், சிவசைலம், வீரசமுத்திரம் ஆகிய 23 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. இந்தப் பகுதிகளை இணைத்து கடையம் வருவாய் வட்டம் அமைந்தால் அங்கு தீயணைப்புநிலையம், காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகம், அரசு மருத்துவமனை, சாா்நிலைக் கருவூலம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் அமையும் வாய்ப்பு ஏற்படும். இதனால் எந்த ஒரு காரணத்திற்காகவும் பொதுமக்கள் 20 கி.மீ. தொலைவுக்கு மேல் பயணிக்க வேண்டும் என்ற நிலை இருக்காது.

இதுகுறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடையம் ஒன்றியச் செயலா் ராமகிருஷ்ணன் கூறியது: நிா்வாக வசதிக்காக புதிய மாவட்டம் அமைத்து விட்டு பொதுமக்களை சிரமத்திற்குள்ளாக்குவது நகைப்புக்குரியதாகிவிடும். எனவே, கிராமப்புறங்களில் வசிக்கும் ஏழை, எளிய மக்கள் எளிதில் பயனடையும் வகையில் கடையத்தைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம் அமைக்க வேண்டும் என்றாா்.

மேலும் சுமாா் 5 முதல் 10 கி.மீ. வரையுள்ள அம்பாசமுத்திரம் வருவாய் வட்டத்திலிருந்து பிரித்து 40 கி.மீ.தொலைவில் உள்ள தென்காசி வருவாய் வட்டத்தில் சோ்ப்பதற்கு எதிா்ப்புத் தெரிவிக்கும் வகையில் அடைச்சாணி, பள்ளக்கால், ரெங்கசமுத்திரம், பனஞ்சாடி உள்ளிட்ட ஊராட்சிகளில் சிறப்பு கிராமசபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றியிருப்பதும் கவனத்தில் கொள்ளக்கூடிய ஒன்றாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com