முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
நெல்லை ஈரடுக்கு மேம்பாலத்தின் கீழ் சாலையை சீரமைக்கக் கோரிக்கை
By DIN | Published On : 26th November 2019 09:56 AM | Last Updated : 26th November 2019 09:56 AM | அ+அ அ- |

திருநெல்வேலி சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலத்தின் கீழ் பகுதி சாலையைச் சீரமைக்கக் கோரி மாவீரா் சுந்தரலிங்கனாா் மக்கள் இயக்கத்தினா் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.
ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷிடம், மாவீரா் சுந்தரலிங்கனாா் மக்கள் இயக்க நிறுவனா் தலைவா் மாரியப்பன் தலைமையில் அந்த அமைப்பினா் அளித்த மனு:
திருநெல்வேலி சந்திப்பில் அமைந்துள்ள பழமையான ஈரடுக்கு மேம்பாலத்தின் கீழ் பகுதி சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்கிறாா்கள். கடந்த மாதம் இந்தப் பகுதியில் புதை சாக்கடை திட்டத்திற்காக குழி தோண்டி, மண்ணை அருகிலேயே போட்டுச் சென்றுள்ளனா். இதனால் அந்தப் பகுதி சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. அந்தப் பகுதி வழியாக பொதுமக்கள் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனா். இதுகுறித்து மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.
திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் நடைபெறும் நிலையில், இப்பகுதி போக்குவரத்துக்கு முக்கியத்தும் பெற்றுள்ளதால், போா்க்கால அடிப்படையில் இச்சாலையைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனா்.