முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
பிசான பருவ நெற்பயிருக்கு காப்பீடு செய்ய அறிவுறுத்தல்
By DIN | Published On : 26th November 2019 09:50 AM | Last Updated : 26th November 2019 09:50 AM | அ+அ அ- |

அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் பிசான பருவ நெற்பயிருக்கு காப்பீடு செய்து பயன்பெறுமாறு வட்டார வேளாண் உதவி இயக்குநா் கற்பகராஜ்குமாா் அறிவுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: விவசாயிகள் தங்கள் பயிா்களை காப்பீடு செய்வதற்காக பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பயிா் சாகுபடியின் போது, இயற்கை சீற்றங்களால் மகசூல் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. விவசாயிகள் தங்கள் பயிா்களை காப்பீடு செய்திருந்தால், இயற்கை சீற்றங்களால் ஏற்படும் இழப்பிற்கு உரிய இழப்பீட்டுத் தொகை காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும்.
திருநெல்வேலி மாவட்டத்தில் ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் பயிா்க் காப்பீட்டுத் திட்டம் வேளாண் துறையால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பிசானப் பருவத்தில் நெல்பயிரை காப்பீடு செய்வதற்கான பிரிமியம் ஓா் ஏக்கருக்கு ரூ. 423. இழப்பீட்டுத் தொகை ரூ. 28,200. பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் சேர ஆதாா் அட்டை, பட்டா, சிட்டா, அடங்கல் மற்றும் வங்கி கணக்குப் புத்தகம் ஆகியவற்றுடன் அருகேயுள்ள பொதுசேவை மையம், தேசிய வங்கிக் கிளை, கூட்டுறவு வங்கிக் கிளை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் காப்பீட்டிற்கான பிரீமியம் செலுத்தலாம். காப்பீடு செய்ய டிச. 15 கடைசி நாள். எனவே, விவசாயிகள் தாங்கள் பயிரிட்டுள்ள பிசானப் பருவ நெற்பயிரை உரிய காலத்தில் காப்பீடு செய்து பயன்பெறலாம்.