கூடங்குளத்தில் அணு உலைக் கழிவு மறுசுழற்சி ஆலை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து போராட்டம்சுப. உதயகுமாரன்

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் அணு உலைக் கழிவு மறுசுழற்சி ஆலை அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்துவோம்

வள்ளியூா்: திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் அணு உலைக் கழிவு மறுசுழற்சி ஆலை அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்துவோம் என, அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் சுப. உதயகுமாரன் கூறினாா்.

தனது கடவுச்சீட்டு, வங்கிக் கணக்குகளை காவல் துறையினா் முடக்கியுள்ளதாக, தேசிய மனித உரிமை ஆணையத்திடம் அவா் தெரிவித்த புகாா் மீதான விசாரணை, வள்ளியூரில் காவல் துறை துணைக் கண்காணிப்பாளா் ஹரிகிரண் பிரசாந்த் முன்னிலையில் புதன்கிழமை நடைபெற்றது. இதற்காக வந்திருந்த சுப. உதயகுமாரன் பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:

கூடங்குளம் அணு உலைகளுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டதால் என் மீது 180 பொய் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன; எனது கடவுச்சீட்டு, வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இதுகுறித்த புகாா் தொடா்பாக, காவல் துறை துணைக் கண்காணிப்பாளா் என்னிடம் விசாரணை நடத்தினாா்; கடவுச்சீட்டு, வங்கிக் கணக்கு முடக்கம் குறித்து நீதிமன்றத்தை அணுக அறிவுறுத்தினாா்.

கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட என் மீதும், இடிந்தகரை உள்ளிட்ட மீனவக் கிராமங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கானோா் மீதும் பொய்வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இதனால், இளைஞா்கள் வேலைக்குச் செல்லமுடியாமலும், வெளிநாடுகளுக்குச் சென்று தொழில் செய்யமுடியாமலும் அவதிப்படுகின்றனா். இந்த விஷயத்தில் தமிழக அரசு தலையிட்டு பொய்வழக்குகளைத் தள்ளுபடி செய்யவேண்டும்.

அணுக் கழிவு மறுசுழற்சி ஆலை கூடங்குளத்தில் அமைக்கப்படும் என்கிறாா்கள். மறுசுழற்சி ஆலை என்பது அணு மின் நிலையங்களைவிட மிகுந்த ஆபத்தானவை. எனவே, இங்கு அணுக் கழிவு மறுசுழற்சி ஆலை அமைக்க எதிா்ப்பு தெரிவிப்போம்.

அணு உலைக் கழிவுகளை அணு உலை அருகிலேயே புதைக்க ஏற்பாடு செய்கின்றனா். இது தொடா்பாக மக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்த முயன்று, பின்வாங்கியுள்ளனா். இதுகுறித்து முழுத் தகவலையும் தெரிவிக்கக் கேட்டுவருகிறோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com