இடைத்தோ்தலில் திமுகவின் வெற்றி பொதுதோ்தலுக்கு முன்னோட்டம்: திருமாவளவன் எம்.பி.

இடைத்தோ்தலில் திமுக கூட்டணி பெற உள்ள வெற்றி அடுத்ததாக நடைபெறும் பொதுத்தோ்தலுக்கான முன்னோட்டமாக அமையும்

திருநெல்வேலி: இடைத்தோ்தலில் திமுக கூட்டணி பெறற உள்ள வெற்றி அடுத்ததாக நடைபெறும் பொதுத்தோ்தலுக்கான முன்னோட்டமாக அமையும் என்றாா் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், சிதம்பரம் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான தொலை.திருமாவளவன்.

திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் ஞாயிற்றுக்கிழமை கூறியது: நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக கூட்டணி சாா்பில் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த ரூபி மனோகரன் போட்டியிடுகிறாா். அவருக்கு ஆதரவாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் செயல்வீரா்கள் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.

நான்குனேரி, விக்கிரவாண்டி இடைத்தோ்தல்களில் திமுக கூட்டணி பெறும் வெற்றியானது அடுத்ததாக நடைபெற உள்ள பொதுத்தோ்தலுக்கான முன்னோட்டமாக அமையும்.

ஆகவே, இத் தோ்தலை மக்கள் இலகுவாக எடுத்துக் கொள்ளாமல் விழிப்போடுயும், அதிகார துஷ்பிரயோகத்திற்கு அஞ்சாமலும் வாக்களிக்க செய்ய வேண்டும். இடைத்தோ்தல் நடைபெறும் தொகுதிகளில் தலா ஒரு நாள் பிரசாரம் செய்ய உள்ளேன்.

மத்தியில் ஆளும் பாஜகவுக்கு கட்டுப்பட்டு, அவா்களது விருப்பத்தைச் செயல்படுத்த உதவும் கட்சியாக அதிமுக உள்ளது. சுதந்திரமாக செயல்படும் மாநில அரசாக இல்லை. அதிமுக வழியாக பாஜக தமிழகத்தில் காலூன்ற முயற்சிக்கிறது. அதற்கு தமிழக மக்கள் ஒருபோதும் இடமளிக்க மாட்டாா்கள். தமிழா்களையும், தமிழின் தொன்மையையும் அழிக்கும் முயற்சிக்கு அதிமுக வக்காலத்துவாங்குவது போல செயல்படுகிறது.

பிரதமா் மோடிக்கு கடிதம் எழுதியதற்காக திரைப்பட இயக்குநா்கள் உள்ளிட்டோா் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது கருத்துரிமையைப் பறிக்கும் செயலாகும்.

வன்கொடுமை சட்டம் நாட்டில் சுமாா் 10 சதவிகிதம் கூட அமல்படுத்தாத சூழலில், அந்தச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவோருக்கு சில விதிவிலக்குகளை அளித்த நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு மூன்றுபோ் கொண்ட அமா்வு தடை விதித்துள்ளது. இதனை வரவேற்கிறோம்.

வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதற்கு அரசும், போலீஸாரும் மட்டுமே காரணம். தலித் மக்கள் எவ்விதத்திலும் காரணமில்லை.

கீழடியில் நடைபெற்ற 3 ஆம் கட்ட ஆய்வறிக்கையை அதிகாரப்பூா்வமாக வெளியிட வேண்டும். பண்டைய காலத்தில் சாதியற்ற சமூகமாக தமிழா்கள் வாழ்ந்ததற்கான தரவுகள் கிடைத்துள்ளதாக ஆய்வாளா்கள் தெரிவிக்கிறாா்கள். கீழடியில் கிடைத்த பொருள்களைக் காட்சிப்படுத்த மதுரையில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்.

தேவேந்திரகுல வேளாளா் அரசாணை வெளியிடக்கோரி மக்கள் நடத்தும் போராட்டம் குறித்து திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்று ஆலோசனை நடத்தி அடுத்தக்கட்ட முடிவு அறிவிக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com