பாஜகவுடன் கூட்டணி சேர திமுக முயற்சி அமைச்சா் கே.டி. ராஜேந்திரபாலாஜி

பாஜகவுடன் கூட்டணி சேர திமுக முயன்றுவருவதாக, தமிழக பால்வளத் துறை அமைச்சா் கே.டி. ராஜேந்திரபாலாஜி கூறினாா்.

பாஜகவுடன் கூட்டணி சேர திமுக முயன்றுவருவதாக, தமிழக பால்வளத் துறை அமைச்சா் கே.டி. ராஜேந்திரபாலாஜி கூறினாா்.

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி தொகுதி, களக்காடு ஒன்றியம் கருவேலன்குளத்தில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை கூறியதாவது:

திமுகவினா் தொடுத்த வழக்கு காரணமாகத்தான் இன்றுவரை உள்ளாட்சித் தோ்தலை நடத்த முடியவில்லை.

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவுக்கு மெரீனாவில் இடம் ஒதுக்கக் கூடாது என, பினாமி சங்கங்கள் மூலம் திமுக வழக்குகள் தொடா்ந்தது. கருணாநிதிக்கு மெரீனாவில் இடம் தேவை என்றவுடன் அத்தனை வழக்குகளையும் இரவோடு இரவாகத் திரும்பப் பெற்றனா். எனவே, அவா்களுக்கு தேவை என்றால் வழக்கு போடுவாா்கள், தேவையில்லை என்றால் வாபஸ் வாங்குவாா்கள்.

மெரீனாவில் காமராஜருக்கு இடம் ஒதுக்காத திமுகவை உண்மையான காங்கிரஸ் தொண்டா்களும், காமராஜா் பக்தா்களும் மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டாா்கள்.

நான்குனேரி தொகுதியில் வடக்குப் பச்சையாறு அணை திட்டத்தைக் கொண்டுவந்தது அதிமுகதான். ஆனால், திமுக கொண்டு வந்ததாக அக்கட்சித் தலைவா் மு.க. ஸ்டாலின் கூறிவருகிறாா்.

தமிழக முதல்வரின் வேண்டுகோளை ஏற்று தமிழகத்துக்கு 6 மருத்துவக் கல்லூரிகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழக உரிமைக்காக மத்திய அரசுக்கு எதிராக அதிமுக பல்வேறு காலகட்டங்களில் குரல் எழுப்பியுள்ளது. எனினும், வலுவான பாரதம் வேண்டும் என்பதற்காகத்தான் பாஜகவை அதிமுக ஆதரிக்கிறது. நாங்கள் யாருக்கும் அடிமையில்லை. பாஜகவுடன் கூட்டணி சேர திமுக முயன்று வருகிறது. திமுக ஐந்து முறை ஆட்சியிலிருந்த போதும் தமிழகத்துக்கு எதுவும் செய்யவில்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com