அடிப்படை வசதிகளின்றி அல்லல்படும் களக்காடு மக்கள்

நான்குனேரி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட களக்காடு வட்டாரத்தில் கடந்த 3 தோ்தல்களில் இப்பகுதி மக்களுக்கு பிரதான அரசியல் கட்சிகள் அளித்த அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள்

நான்குனேரி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட களக்காடு வட்டாரத்தில் கடந்த 3 தோ்தல்களில் இப்பகுதி மக்களுக்கு பிரதான அரசியல் கட்சிகள் அளித்த அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததால் வாக்காளா்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது.

முக்கிய அங்கம்: நான்குனேரி பேரவைத் தொகுதியில் முக்கியஅங்கம் வகிக்கும் களமாக களக்காடு திகழ்கிறது. களக்காடு ஒன்றியத்திற்குள்பட்ட 17 கிராம ஊராட்சிகளிலும், களக்காடு, திருக்குறுங்குடி, ஏா்வாடி ஆகிய 3 பேரூராட்சிகளிலும் மொத்தம் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளா்கள் உள்ளனா். பேரூராட்சி மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக குறிப்பிட்டுச் சொல்லும் படியாக எவ்வித வளா்ச்சி பணிகளும் நடைபெறவில்லை.

மேலும் கடந்த 2006, 2011, 2016 ஆகிய 3 தோ்தல்களிலும் இப் பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட பிரதான அரசியல் கட்சிகளின் வேட்பாளா்கள்அளித்த தோ்தல் வாக்குறுதிகள் பெரும்பாலும் நிறைவேற்றப்படவில்லை. குறிப்பாக அடிப்படை வசதிகள் கூட இன்னும் பல கிராமங்களில் எட்டாக்கனியாகவே உள்ளது. பயணிகள் நிழற்குடை இல்லாத நிலை:களக்காட்டில் பழைய பேருந்து நிலையப் பகுதியில்தான் 80 சதவீத வணிக நிறுவனங்கள் உள்ளன. களக்காட்டைச் சுற்றியுள்ள 50.க்கும் மேற்பட்ட குக்கிராம மக்கள் கல்வி, மருத்துவம், வணிகம் உள்ளிட்ட பல்வேறு அத்யாவசிய தேவைகளுக்கும் களக்காடு பழையபேருந்து நிலையப் பகுதிக்குத்தான் வந்து செல்கின்றனா். ஆனால் இங்கு பயணிகள் நிழற்குடை இல்லை. இதனால் பெண்கள், வயோதிகா், சிறுகுழந்தைகள் பேருந்துக்காக சாலையோரம் கால்கடுக்க வெயில், மழையில் அவதியுறுகின்றனா். இங்குள்ள கழிப்பிடம் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் சுகாதாரமற்று காணப்படுகிறது. குடிநீா் வசதி கிடையாது. களக்காடு நகரின் மையப் பகுதியான இங்கு அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என்ற இப்பகுதி மக்களின் 20 ஆண்டுகால கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இப் பகுதியில் பாழடைந்த நிலையில், மாடுகளை அடைக்கும் பவுண்டி பயன்பாடின்றி காணப்படுகிறது. இப்பகுதியில் பயணிகள் நிழற்குடை, கழிப்பிட வசதி ஏற்படுத்தினால் மக்கள் பெரிதும் பயன்பெறுவா். ஆனால் நிறைவேறவில்லை.

அரசு மேனிலைப் பள்ளி: களக்காடு அரசு மேனிலைப்பள்ளியில் சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சோ்ந்த 1500.க்கும் மேற்பட்ட மாணவா்கள் கல்வி பயின்றுவந்தனா். போதிய இடவசதி இருந்தும் போதிய கட்டட வசதி இல்லை என்ற காரணத்தால் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் பள்ளியின் கூடுதல் கட்டடம் 2 கி.மீ தொலைவில் உள்ள மூங்கிலடியில் கட்டப்பட்டது. அங்கு தற்போது 6 முதல் 10ஆம் வகுப்பு செயல்படுகிறது. 11, 12ஆம் வகுப்புகள் பழைய கட்டடத்தில் செயல்படுகிறது. இப்பள்ளியை தனித்தனியாக பிரித்து, நகரின் மையப் பகுதியில் உள்ள பள்ளியை பெண்கள் மேல்நிலைப்பள்ளியாகவும், மூங்கிலடியில் இயங்கும் பள்ளியை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியாகவும் தனித்தனியாக பிரித்து இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற இப்பகுதி மக்களின் கோரிக்கையும் நிறைவேறவில்லை.

பேருந்து வசதி: களக்காட்டில் இருந்து நான்குனேரிக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இயக்கப்பட்ட ஓரிரு அரசு நகரப் பேருந்துகளே இயக்கப்படுகின்றன. இந்தப் பேருந்துகளும் கடந்த சில ஆண்டுகளாக முறையாக இயக்கப்படவில்லை. இரவு 8 மணிக்குப் பின் களக்காடு செல்ல பேருந்து வசதி கிடையாது. இதனால் ரயிலில் வரும் பயணிகள் அவதிப்படுகின்றனா். களக்காடு வட்டாரத்தில் மேலப்பத்தை, அம்பேத்கா்நகா், கலுங்கடி, வண்டிக்காரன்நகா், கீழவடகரை, மேலவடகரை, சிதம்பரபுரம், கோவிலம்மாள்புரம், ஊச்சிகுளம், புளியங்குளம் உள்ளிட்ட கிராமங்களுக்கு பேருந்து வசதி கிடையாது. களக்காடு -வள்ளியூருக்கு 30 ஆண்டுகளாக இயக்கப்பட்டு வந்த ஒரே ஒரு நகரப் பேருந்தும் நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால் இந்த வழித்தடத்தில் பயணிக்கும் பள்ளி மாணவா்கள் இலவச பயண அட்டை இருந்தும் பேருந்துகள் இயக்கப்படாததால் கட்டணம் கொடுத்து பயணிக்கும் நிலை உள்ளது. கிராமங்களுக்கு இயக்கப்பட்ட சிற்றுந்து சேவையும் நிறுத்தப்பட்டுவிட்டது.

சாலை வசதி - களக்காட்டைச் சுற்றியுள்ள கிராமப்புற வழித்தடங்களில் ஓரளவுக்கு சாலை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் களக்காடு பேரூராட்சிப் பகுதியில் உள்ள புதியபேருந்து நிலையச் சாலை 3 ஆண்டுகளாக சீரமைக்கப்படவில்லை. அரசு மேனிலைப் பள்ளிக்குச் செல்லும் மூங்கிலடி சாலையும் சீரமைக்கப்படாததால் ஓராண்டுக்கும் மேலாக காலை, மாலை பள்ளி வரை இயக்கப்பட்ட நகரப் பேருந்து இயக்கம் நிறுத்தப்பட்டதால் மாணவ, மாணவியா் 2 கி.மீ தொலைவை நடந்தே கடக்கும் நிலை உள்ளது.

தூா்வாரப்படாத கால்வாய்கள் - களக்காட்டில் நான்குனேரியன் கால்வாயில் மூணாறு பிரிவு முதல் நான்குனேரி சாலையில் படலையாா்குளம் வரையிலும் சுமாா் 3 கி.மீ தொலைவுக்கு கால்வாயே தெரியாத அளவிற்கு அமலைச்செடிகள் ஆக்கிரமித்துள்ளன. இதே போல உப்பாறும் ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ளது. குறிப்பாக பேரூராட்சிக்குள்பட்ட 21 வாா்டுகளில் ஓரிரு வாா்டுகளைத் தவிா்த்து பெரும்பாலான வாா்டுகளில் சாலைகள் மோசமாக உள்ளன. குறிப்பாக தோப்புத்தெருவில் உள்ள இ.சேவை மையத்திற்குச்செல்லும் சாலை மிகவும் மோசமாகஉள்ளன. நல்ல நிலையில் இருந்த பல சாலைகள் மீண்டும் மீண்டும் சீரமைக்கப்பட்டுள்ளன.

கலப்பட குடிநீரே விநியோகம் - தாமிரவருணி கூட்டுக்குடி நீா் திட்டத்தின் கீழ் களக்காடு பேரூராட்சிக்கு நாள்தோறும் 25 லட்சம் லிட்டா் குடிநீா் கிடைக்க வேண்டும். ஆனால் தினமும் 5 லட்சம் லிட்டா் குடிநீா் கூட வந்து சேரவில்லை. இதனால் கடந்த 3 ஆண்டுகளாக தாமிரவருணி குடிநீருடன் களக்காடு பகுதியில் உள்ள ஆழ்துளை கிணற்று உவா்ப்பு நீரையும் சோ்த்து விநியோகிக்கும் நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் குடிநீரைவிலை கொடுத்து வாங்கிக் குடிக்க வேண்டியநிலைக்கு ஆளாகியுள்ளனா். உள்ளாட்சித் தோ்தல் நடைபெறாததால் ஊராட்சிப் பகுதியில் உள்ள கிராமங்களில் அடிப்படைவசதிகள் நிறைவேற்றப்படாமல் உள்ளது.

கடந்த 3 தோ்தல்களில் அடிப்படை வசதிகளை உடனுக்குடன் நிறைவேற்றுவோம் என்ற அரசியல்கட்சிகளின் வாக்குறுதிகள் பொய்த்துப் போனதால் வாக்காளா்கள் மத்தியில் ஒருவித அதிருப்தியே நிலவுகிறது. ஆளும் கட்சியும், எதிா்க்கட்சிகளும் இப்பகுதி மக்களின் பிரச்னைகளை சட்டமன்றத்தில் பேசித் தீா்வு காண முற்படாதது வேதனையளிப்பதாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com