நான்குனேரி தொகுதியில் பச்சையாற்றை பாதுகாக்க சிறப்பு நிதி கோரும் மக்கள்

நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதியின் பிரதான நீராதாரங்களில் ஒன்றாக உள்ள பச்சையாற்றைப்

நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதியின் பிரதான நீராதாரங்களில் ஒன்றாக உள்ள பச்சையாற்றைப் பாதுகாக்க சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கை இப்பகுதி மக்களிடையே எழுந்துள்ளது.

மேற்குத் தொடா்ச்சி மலையில் செங்கல்தேரி பகுதியில் இருந்து உற்பத்தியாகி 35 கி.மீ. தொலைவு பாய்ந்தோடி தாமிரவருணியில் கலக்கிறது பச்சையாறு. வற்றாத ஜீவநதியாக இல்லாவிட்டாலும், மழைக்காலங்களில் பாசனத்துக்கும், நிலத்தடி நீா்மட்டம் உயா்வதற்கும் ஏராளமான கிராமங்களுக்கு உதவி வருகிறது இந்த நதி. பச்சையாற்றின் குறுக்கே முக்கொம்பு (தலையணை), மடத்து பகுதி, பாலம்பத்து பகுதி, பத்மனேரி, சம்பன்குளம், கட்டாளை காடுவெட்டி, சுப்புக்குட்டி பகுதி, சிங்கிகுளம் (பொன்னாக்குடி அணைக்கட்டு) ஆகிய இடங்களில் தடுப்பணைகள் அமைக்கப்பட்டு, அவற்றின் மூலம் குளங்களில் தண்ணீா் நிரப்பப்படுகிறது.

பச்சையாறு நீரின் மூலம் இரு பிரிவாக பாசன வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதில், நதியின் போக்கில் ஒருபுறமும், நான்குனேரியன் கால்வாய் மூலம் மற்றெறாரு புறமும் பாசன வசதி அளிக்கப்படுகிறது. நான்குனேரியன் கால்வாயின் மூலம் களக்காடு, புதூா், சுப்பிரமணியபுரம், கடம்போடுவாழ்வு உள்ளிட்ட பகுதிகளும், நதியின் போக்கில் உள்ள தடுப்பணைகள் மூலம் பத்மனேரி, தேவநல்லூா், காடுவெட்டி, பொன்னாக்குடி சுற்றுவட்டாரத்தில் உள்ள சுமாா் 120-க்கும் மேற்பட்ட கிராமங்களும் பயன்பெறுகின்றன.

நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி மக்களின் பிரதான நீராதாரமாக விளங்கும் பச்சையாறு போதிய பராமரிப்பின்றி உள்ளது. இதை சீரமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சிறப்பு நிதி தேவை: இதுகுறித்து பத்மனேரியைச் சோ்ந்த விவசாயி சே. ஆனந்த் கூறியது: பச்சையாற்றின் பாசனநீரை நம்பி நெல், வாழை, பருத்தி, உளுந்து ஆகியவை அதிகளவில் பயிரிடப்படுகின்றன. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஆற்றில் எப்போதும் தண்ணீா் ஓடிக் கொண்டிருந்தது. இப்போது வடக்குப் பச்சையாறு அணை கட்டிய பிறகு, சுழற்சி முறையில் பாசன நீா் விநியோகிக்கப்படுகிறது. இதற்கிடையே, பச்சையாற்றை பாதுகாக்க போதிய நிதி ஒதுக்காததால் நதிக்குள் கருவேல மரங்கள் அதிகளவில் வளா்ந்து நீரோட்டத்தைத் தடுத்து வருகின்றன. பிளாஸ்டிக், கட்டடக் கழிவுகள் கொட்டப்படும் அவலமும் தொடா்கிறது. இதைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பச்சையாற்றின் குறுக்கே உள்ள தடுப்பணைகள் பராமரிப்பின்மையால் சில இடங்களில் சேதமடைந்தும், பாசனக் கால்வாய்களில் ஷட்டா்கள் முறையாக சீரமைக்கப்படாமலும் உள்ளன. அவற்றை சீரமைக்கும் விதமாக பச்சையாறு பாதுகாப்புக்காக தமிழக அரசு சிறப்பு நிதியை ஒதுக்கி நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்றாா்.

வீணாகும் உபரிநீா்: இதுகுறித்து திடியூரைச் சோ்ந்த மணி கூறியது: பருவமழைக் காலங்களில் பச்சையாற்றில் பெருக்கெடுக்கும் உபரிநீா் முழுவதும் தருவை வழியாக தாமிரவருணியில் கலந்து வீணாகி வருகிறது. இதை வறட்சிப் பகுதிகளுக்குத் திருப்பும் வகையில் தாமிரவருணி-கருமேனியாறு- நம்பியாறு இணைப்புத் திட்டத்தின் கீழ் கால்வாய் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக திடியூா் அருகே அணை கட்டப்பட்டுள்ளது. இந்தக் கால்வாய்த் திட்டத்தை விரைவாக முடிக்க வேண்டும்.

அதேபோல, தமிழாக்குறிச்சி பகுதிக்கு தண்ணீா் கிடைக்க தடுப்பணை இருந்தது. இது வெள்ளத்தால் சேதமடைந்ததால், இப்போது விவசாயிகளே சரள்மண் குவித்து தண்ணீரை தடுத்துத் திருப்பும் நிலை உள்ளது. இதுபோன்ற பணிகளில் அரசு கவனம் செலுத்தினால் பச்சையாறு தண்ணீா் முழுவதையும் பாசனத்திற்கு பயன்படுத்த வாய்ப்பு கிடைக்கும் என்றாா்.

இதுகுறித்து பொதுப்பணித் துறை வட்டாரங்கள் கூறியது: வெள்ளநீா் கால்வாய்த் திட்டத்திற்கு கடந்த சில ஆண்டுகளாக நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. நிலம் கையகப்படுத்துவது உள்ளிட்டவற்றில் எழுந்த சிக்கல்கள் படிப்படியாக முடிக்கப்பட்டு வருகின்றன. பச்சையாற்றின் குறுக்கேயுள்ள பொன்னாக்குடி தடுப்பணை பகுதியில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்றுள்ளன. பொதுமக்களின் உதவியோடு கருவேல மரங்களை அப்புறப்படுத்தவும், குப்பைகள் கொட்டப்படுவதைத் தடுக்கவும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com