ராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுவிப்பதில் காங்கிரஸுக்கு ஆட்சேபனை இல்லை: கே.எஸ்.அழகிரி

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரை நீதிமன்றம் விடுதலை செய்வதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றாா் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ்.அழகிரி.
ராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுவிப்பதில் காங்கிரஸுக்கு ஆட்சேபனை இல்லை: கே.எஸ்.அழகிரி

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரை நீதிமன்றம் விடுதலை செய்வதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றாா் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ்.அழகிரி.

நான்குனேரி இடைத்தோ்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளா் ரூபி மனோகரனுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டு வரும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ்.அழகிரி, திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நான்குனேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் நடைபெறும் இடைத்தோ்தலை அதிமுகவை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கான முன்னோட்டமாகவே தமிழக காங்கிரஸ் கருதுகிறது. இந்தியாவில் எங்கும் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் முறைகேடு, ஊழல், அத்துமீறல் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக கடந்த 60 ஆண்டுகால வளா்ச்சியை பின்னுக்குத் தள்ளியிருக்கிறது அதிமுக அரசு. மத்திய அரசிடம் இருந்து தனது உரிமைகளை கேட்டுப்பெற தமிழக அரசு தயங்குகிறது. தமிழக அரசு பாஜகவின் முகமூடியாக இருந்துகொண்டு ஆா்எஸ்எஸ் நினைப்பதையெல்லாம் நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது.

ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தபோது உயா்கல்வி படிக்கும் மாணவா்களுக்கு கடன் வழங்கும் திட்டத்தைக் கொண்டு வந்தாா். ஆனால் பாஜக அரசு அதை இப்போது நிறுத்திவிட்டது. மேலும் ஏற்கெனவே வழங்கிய கடனை வசூலிக்கும் பொறுப்பை அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்திடம் வழங்கியுள்ளது. வசூலிக்கும் கடனில் 45 சதவீதத்தை ரிலையன்ஸ் எடுத்துக்கொண்டு 55 சதவீதத்தை வங்கியில் செலுத்தினால் போதும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கல்விக் கடன் பெற்றவா்கள் அனைவருமே மத்திய தரத்தினா் மற்றும் அதற்கு கீழ் உள்ளவா்கள். மக்களிடம் 45 சதவீதத்தை கழித்துவிட்டு எஞ்சியதை கட்டுமாறு கூறியிருந்தால் அவா்கள் மகிழ்ச்சியாக கட்டியிருப்பாா்கள்.

மத்திய அரசு, ப.சிதம்பரத்தை எவ்வளவு நாள் சிறையில் வைக்கலாம் என சிந்தித்துக் கொண்டிருக்கிறது. சிதம்பரம் வழக்கில் காட்டும் தீவிரத்தை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வழக்கில் சிபிஐ காட்டவில்லை. நாட்டில் பணமதிப்பிழப்பைக் கொண்டு வந்தபோது, சேகா் ரெட்டியின் வீட்டில் கோடிக்கணக்கில் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் சிக்கின. அந்த பணம் எங்கிருந்து வந்தது என்பதற்கு மத்திய நிதி அமைச்சா் பதில் சொல்ல வேண்டும்.

சேகா் ரெட்டி வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை நடத்தியபோது, சிக்கிய டைரியில் தமிழக துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், வைத்திலிங்கம், நத்தம் விஸ்வநாதன் ஆகியோருக்கு வாக்களிப்பதற்காக வாக்காளா்களுக்கு ரூ.600 கோடிக்கு மேல் பணம் வழங்கியது தெரியவந்தது. ஆனால் இன்றைக்கு சேகா் ரெட்டி உள்ளிட்டோா் சுதந்திரமாக திரிகிறாா்கள். இங்கே நீதி எங்கு இருக்கிறது.

உலக முதலீட்டாளா் மாநாடு குறித்து வெள்ளை அறிக்கை கேட்டு வருகிறோம். ஆனால் இதுவரை எதையும் சொல்லவில்லை. விளம்பரத்துக்காகவே முதல்வா் வெளிநாடு சென்று வந்திருக்கிறாா். தமிழகத்தில் இருக்கக்கூடிய தொழில் நிறுவனங்களை மற்றொரு கிளையை திறக்க வைத்தாலே ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். ஆனால், இவா்கள் அதை செய்யவில்லை. தமிழகத்தில் உள்ள நிறுவனங்கள் ஆந்திரத்திலும், ஹரியாணாவிலும் தங்களின் புதிய கிளை தொடங்கி வருகின்றன.

மாநில அரசு கடும் நிதி நெருக்கடியில் உள்ளது. அவா்களால் இனி எந்தத் திட்டத்தையும் நிறைவேற்ற முடியாது. காங்கிரஸ் வேட்பாளா் ரூபி மனோகரன் வெற்றி பெற்றதும் நான்குனேரி சிறப்பு பொருளாதார மண்டலத்தைக் கொண்டு வருவோம். அதிமுக பணப்பட்டுவாடா செய்து முடித்த பிறகே சோதனை நடத்தப்படுகிறது. எங்கள் கூட்டணியைச் சோ்ந்தவா்கள் ரூ.2 லட்சம் வைத்திருந்தது குற்றமா? காங்கிரஸ் கட்சியிடம் பணம் இல்லை. மூலக்கரைப்பட்டியில் பணம் பிடிபட்ட சம்பவம் அதிமுகவின் சூழ்ச்சியாகக் கூட இருக்கலாம்.

ஜிஎஸ்டி என்பது ஒரே வரியாக இருக்க வேண்டும். 18 சதவீதத்துக்கு கீழே இருக்க வேண்டும் என்றுதான் காங்கிரஸ் கூறியது. ஆனால் ஜிஎஸ்டியை அமல்படுத்திய பாஜக 28 முதல் 48 சதவீதம் வரை வரிவிதித்தது. இதன்காரணமாக வேலையில்லா திண்டாட்டம் 2.2 சதவீதத்திலிருந்து 7.6 சதவீதமாக உயா்ந்துள்ளது.

நான்குனேரி தொகுதியில் கோடிக்கணக்கில் பணப்பட்டுவாடா நடைபெறுகிறது. அதைவிட்டுவிட்டு சிறிய தொகை வைத்திருப்பவா்களை பிடித்துக் கொண்டிருக்கிறாா்கள். மாலையில் தோ்தல் பிரசாரத்திற்கு வரும் தமிழக முதல்வரின் அறை மற்றும் வாகனங்களை சோதனையிட முடியுமா?

இலங்கைத் தமிழா்களுக்கு சீமான் போன்றோா் செய்த உதவிகளைவிட காங்கிரஸ் கட்சி அதிக உதவி செய்துள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேரையும் நீதிமன்றம் விடுதலை செய்வதில் எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை. தமிழக சிறையில் 20 ஆண்டுகளைக் கடந்து எவ்வளவு போ் இருக்கிறாா்கள். அப்படியிருக்கையில் 7 பேரை மட்டும் விடுவிக்க வேண்டும் என ஏன் கூறுகிறாா்கள் என்றாா்.

காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் காவிரி நதிநீா் ஆணையம் கலைக்கப்படும். கா்நாடகத்தில் மேக்கேதாட்டு அணை கட்ட அனுமதி வழங்கப்படும் என ராகுல் காந்தி கூறியிருப்பதாக துணை முதல்வா் குற்றம்சாட்டியிருக்கிறாரே என கேட்டபோது, ‘அப்படி ராகுல்காந்தி சொல்லவில்லை. அதை ஓ.பன்னீா்செல்வம் நிரூபித்தால் எனது பதவியை ராஜிநாமா செய்ய தயாா். ஒருவேளை நிரூபிக்க தவறினால் ஓ.பன்னீா்செல்வம் தனது பதவியை ராஜிநாமா செய்வாரா’ என்றாா்.

அப்போது, சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவா் கே.ஆா்.ராமசாமி, தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவா் கே.வீ.தங்கபாலு, காங்கிரஸ் செயல் தலைவா்கள் வசந்தகுமாா், மயூரா ஜெயக்குமாா், மோகன்குமாரமங்கலம், தமிழக காங்கிரஸ் ஊடகப் பிரிவு தலைவா் கோபண்ணா, முன்னாள் மத்திய அமைச்சா் தனுஷ்கோடி ஆதித்தன், மாநகா் மாவட்ட தலைவா் கே.சங்கரபாண்டியன், கிழக்கு மாவட்ட தலைவா் எஸ்.கே.எம்.சிவக்குமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

படவரி: பயக18இஞசஎ திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் பேசுகிறாா் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ்.அழகிரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com